விசா சேவை கட்டண அறவீடு மத்திய வங்கி மோசடியை விட பல மடங்கு அதிகம் - ரவூப் ஹக்கீம்
08 May,2024
சுற்றுலாப் பயணிகளுக்கு விசா சேவை வழங்கும் தனியார் நிறுவனத்துக் கிடைக்கும் நிதி, மத்திய வங்கி மோசடியைவிடப் பல மடங்கு அதிகமாகும். அதனால் இது தொடர்பில் விசேட விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் ஊழல் மோசடிகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எமது நாட்டுக்கு புதிய முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், நாட்டுக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கான விசா வழங்குவதில் பாரிய மோசடி இடம்பெற்று வருவது தொடர்பில் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் அரசாங்கம் இது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது.? சுற்றுலாப் பயணிகளிடமிருந்து மேலதிகமாக 25 டொலர்களை அறவிட நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த வருடத்தில் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தர இருப்பதாக எதிர்வு கூறப்பட்டிருக்கிறது.
அவ்வாறு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்தால் அவர்களுக்கு விசா வழங்கும் குறித்த தனியார் நிறுவனத்துக்கு அதன் மூலம் மாத்திரம் 62.5மில்லியன் அமெரிக்க டாெலர் கிடைக்கப்பெறுகிறது. இதனை இலங்கை ரூபாவில் தெரிவிப்பதாக இருந்தால், 18 பில்லியனே 750 மில்லியன் ரூபா (1875 கோடி). ஆனால் இந்த வருட வரவு செலவு திட்டத்தில் குடிவரவு குடி அகல்வு திணைக்களத்துக்குச் சம்பளம் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளுக்கு 992 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில், குறித்த தனியார் நிறுவனத்துக்கு இந்த விசா வழங்கும் சேவை மூலம் 18.6 மடங்கு அதிகமாகும்.
மத்திய வங்கி மோசடி தொடர்பில் நாங்கள் கதைக்கிறோம். ஆனால் தற்போது இடம்பெற்றுவரும் இந்த மோசடி மத்திய வங்கி மோசடியைவிடப் பல மடங்கு அதிகமாகும். அத்துடன் இந்த விசா சேவையை எஸ்.எல்.டி. மொபிடல் நிறுவனம் குறித்த நிதியில் நூற்றுக்கு 4 வீதத்தைப் பெற்றுக்கொண்டு வழங்குவதற்குத் தயாராக இருந்த நிலையில். இவ்வாறான பாரிய நிதியை செலுத்துவதால், இந்த பணம் யாருடைய பொக்கெட்டுக்கு செல்கிறது என கேட்கிறோம். இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார்.