விசா கட்டணங்கள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!
06 May,2024
வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு (Sri Lanka) வரும் போது வழங்கப்படும் 30 நாள் விசாவுக்காக 50 டொலர்களை அறவிடும் நடவடிக்கையை மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தலைமையில் இன்று (6) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்தியா (India), சீனா (China), ரஷ்யா (Russia), ஜப்பான் (Japan), மலேசியா (Malaysia), தாய்லாந்து (Thailand) மற்றும் இந்தோனேசியா (Indonesia) ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா சேவையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டவர் ஒருவர் நாட்டிற்குள் நுழையும் போது அதற்கான விசா விநியோகிக்கும் முழுப் பொறுப்பையும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்கப்படும் விசா நடைமுறை தொடர்பில் அண்மை நாட்களில் இலங்கையில் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.