சர்வதேச மன்னிப்புச் சபை, தமது உலகளாவிய வருடாந்த அறிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல், பதிவுகளை கடுமையாக சாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீதி மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான விடயத்தில் இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதனையும் காணாதநிலையில், தண்டனையின்மை தொடர்ந்தும் நிலைபெற்றுள்ளது என்று மன்னிப்புசபை குறிப்பிட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி, நாட்டின் பொருளாதார நெருக்கடி வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளது, அத்துடன் அரசாங்கம் மற்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறது.
மனித உரிமை மீறல்
இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட "உண்மை ஆணையம்" பற்றி ஏற்கனவே 9 சர்வதேச மனித உரிமை அமைப்புகள் செப்டெம்பர் மாதத்தில் விமர்சனங்களை வெளியிட்டிருந்தன.
உள்நாட்டு விசாரணை ஆணையங்கள் பொறுப்புக்கூறலை உறுதி செய்யத் தவறியதால், பாதிக்கப்பட்ட சில சமூகங்கள் இந்தத் திட்டங்களை முற்றிலுமாக நிராகரித்தன.
இந்தநிலையில், நட்டஈடுகளுக்கான அலுவலகம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், என்பனவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இலங்கை அரசாங்கம் இந்த வருடத்தில் எட்டவில்லை
அத்துடன் மனித உரிமை மீறல்களில் தண்டனையின்மைக்கான எடுத்துக்காட்டுகளாக உள்நாட்டு நீதிமன்ற அமைப்பில் மீண்டும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாமல் இழுத்தடிக்கப்பட்டதாகவும் சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளையும் மன்னிப்புசபை கடுமையாக சாடியுள்ளது, கடந்த நவம்பரில், கிழக்கு நகரமான மட்டக்களப்பில் நினைவேந்தல் ஊர்வலத்திற்காக 9 தமிழர்கள் இலங்கையின் கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்தை சபை, மேற்கோள்காட்டியுள்ளது.
இந்தச் சட்டத்தை இரத்துச் செய்வதாக உறுதியளித்த போதிலும், இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகிறது.
இலங்கையின் இணையப் பாதுகாப்பு யோசனையையும், பௌத்தத்தை விமர்சித்ததற்காக சமூக விமர்சகர்கள் கைது செய்யப்பட்டதையும் மன்னிப்புசபை விமர்சித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் போராட்டங்கள் இராணுவம் மற்றும் காவல்துறையினரால் கடுமையாக ஒடுக்கப்படுவதால், சர்வதேச சமூகம் அதன் பாதுகாப்புப் படைகளின் பயிற்சி மற்றும் ஏற்பாடுகள் உட்பட இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்பை அவசரமாக மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புசபை அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.