ருமேனியாவுக்கு ஆட்கடத்தல்,கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது
26 Apr,2024
போலி ஆவணங்கள் மற்றும் போலி முத்திரைகளைப் பயன்படுத்தி ருமேனியாவில் இளைஞர்கள் குழுவொன்றை வேலைக்கு அனுப்ப முயற்சித்த நபரை விமான நிலையப் பணியகப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி கிளிநொச்சி பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாக, ருமேனியாவிற்கு வேலைக்குச் சென்ற ஐந்து இளைஞர்கள் ஆவணங்களைச் சரிபார்த்த போது ஏமாற்றப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டனர்.
இதன் பின்னர், பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவு அதிகாரிகள், அவர்களுடன் வந்த ஏஜென்சியின் பிரதிநிதியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திய நிலையில் வேலைவாய்ப்பு நிறுவனம் சட்டவிரோதமான நிறுவனம் என்பது தெரியவந்துள்ளது.
எனவே, வெளிநாடு செல்ல வந்த இளைஞர்களின் ஆவணங்களை அதிகாரிகள் கடுமையாகச் சரிபார்த்ததில், பீரோவின் பாதுகாப்பு முத்திரைகள், உத்தியோகபூர்வ முத்திரைகள் போலியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், அதிகாரிகளிடம் வழங்கப்பட்ட ருமேனியா விசாக்கள் போலி விசாக்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அவருக்கு உதவிய மற்றுமொரு நபரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (26) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.