தமிழீழ விடுதலை புலிகளை வைத்து ஆட்சியை கைப்பற்றிய சிங்கள அரசியல்வாதிகள்
26 Apr,2024
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்காக தமிழீழ விடுதலை புலிகளை பிரிவினைவாதிகளாக காட்ட வேண்டிய தேவை சிங்கள பேரினவாத அரசியல்வாதிகளிடம் காணப்பட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இன்றைய(26) நாடாளுமன்ற விவாதத்தின் போதே, அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
விடுதலை புலிகளை பிரிவினைவாதிகளாக வெளிக்காட்டி அப்போதைய அரசாங்கம் அவர்களை அழித்ததாகவும், இதனை முன்வைத்து உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்களை பெற்றுக் கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் விடுதலை புலிகள் அமைப்பு, தமிழ் தேசம் மற்றும் அதன் சுயநிர்ணயத்தை பாதுகாக்கும் வகையிலான ஒரு தீர்வுக்கு தயாராக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை முன்னோக்கி செல்ல வேண்டுமானால், தமிழர்களை அரவணைப்பதற்கு தயாராக வேண்டுமெனவும், அதனை நடைமுறைபடுத்த வேண்டுமானால் ஒற்றையாட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும் எனவும் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்