தமிழர்களின் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்களை விட தேசிய மக்கள் சக்திக்கு அதிக கரிசனை உள்ளதாக அந்த கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தமது கட்சி திடமாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
யாழ்.ஊடக மையத்தில் இன்று (9) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் தேசிய பிரச்சினை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தமிழர்களின் தேசிய பிரச்சினை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறிதரன் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் அரசியல் தலைவர்களை விட எமக்கு கரிசனை உண்டு.
தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் திடமாக உள்ளோம். தமிழ் மக்களின் பிரச்சினையை இனங்கண்டுள்ளோம்.
அதற்கான தீர்வினை பரிந்துரை செய்யவுள்ளோம். தீர்வு என்ன என்பதை மிக விரைவில் தெரியப்படுத்துவோம்.
மாற்றம் வேண்டும்
தற்போது இந்த விடயம் தொடர்பில் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி வருகிறோம்.
அடுத்து தமிழ் கட்சிகளோடு பேசவுள்ளோம். தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது, அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்.
எனினும், பொதுவான நிலைப்பாடு “மாற்றம் வேண்டும்” என்பதாகவே உள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக நீலம்-பச்சை என மாறி மாறி ஆட்சிக்கு வந்து மக்களுக்கு வாய்க்கரிசி போட்டுள்ளார்கள்.
தமிழ் பொது வேட்பாளர்
எனவே, மாற்றம் வேண்டும் என பெரும்பாலான மக்கள் சிந்திக்கின்றனர். அனுரகுமார திசாநாயக்க தான் அடுத்தது என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
மாற்றத்தையே ஒட்டு மொத்த இலங்கை மக்களும் விரும்புகின்றர். இந்த நிலையில், தமிழ் பொது வேட்பாளர் பேசுவது மீள நீலம், பச்சையை தான் வீறு கொள்ள வைக்கும்.
ஆகவே, தமிழ் மக்கள் சிந்தித்து செயற்படுவார்கள் என நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.