முற்றாக அகற்றப்படும் முப்படையினர்! புனர்வாழ்வு மையங்களில் எடுக்கப்பட்ட தீர்மானம்
15 Mar,2024
புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகளிலிருந்து முப்படையினரை முற்றாக அகற்றி அவர்களுக்கு பதிலாக இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை அதிபர் ஊடக மையத்தில் நேற்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாந்தீவில் புனர்வாழ்வளிப்பு நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
சுகாதார அமைச்சுடன் நீதி அமைச்சும் இணைந்து முன்னெடுத்த கலந்துரையாடலில் கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக தற்போது தொற்று நோய் சிகிச்சைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாந்தீவினை வழங்குவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண இணக்கம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வருடத்துக்குள் வீட்டுக்காவல் முறைமையை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடிகளைக் குறைத்துக் கொள்வதற்கும், அரசாங்கத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு தண்டனை வழங்குவது மாத்திரம் போதாது என்பதால் அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கும் உரிய தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்குமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களாவர்” என தெரிவித்துள்ளார்.