வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டர்வகளின் வேட்டியை பலவந்தமாக களைந்து அரை நிர்வாண கோலத்தில் கொண்டு சென்ற நெடுங்கேணி காவல்துறை பொறுப்பதிகாரிக்கெதிராக குற்றச்சாட்டுகள் வலுப்பெற்று இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன்போது நெடுங்கேணி காவல்துறை பொறுப்பதிகாரி வேட்டியை கொடுக்க வேண்டாம் எனக் கூறி அவர்களை அழைத்துச்சென்றதாகவும் இனவாதத்தோடு மிலேச்சத்தனமாக நடந்துகொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவாரத்திரி நிகழ்வுகளின் போது அங்கே பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மிகப் பெரும் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
சிவராத்திரிக்கு முன்பிருந்தே ஆலய நிர்வாகத்தினர் மீது காவல்துறையினர் அடக்குமுறைகளை பிரயோகித்து இருந்தனர், ஆலய நிர்வாகத்தினர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்த போது ஆலயத்திற்கு எந்தவித பொருட்களையும் கொண்டு செல்ல காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.
மேலும், தூர இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்களை 5 கிலோ மீற்றர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்தியது மாத்திரமல்லாமல், குடிநீரை எடுத்துச் செல்லவும் அனுமதிக்கவில்லை.
5 கிலோமீற்றர் நடந்து சென்று குழந்தைகள் உட்பட பலர் தண்ணீர் தாகத்தில் இருந்த போதும் அதனை எடுத்துச் செல்ல காவல்துறையினர் அனுமதிக்கவில்லை, இதன்போது அங்கு பெரும் குழப்பநிலை நிலவி நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பின் மதியம் 2 மணிக்கு பின்னர் குடி நீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.
அப்படி பாடுபட்டு கொண்டு செல்லப்பட்ட தண்ணீரையும் மாலை நேரம் காவல்துறையினர் திறந்து வெளியேற்றி மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டனர்.
பின்னர், அங்கிருந்த பக்தர்களை அச்சுறுத்தி வெளியேற்ற முற்பட்டனர், சிவனுக்கு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களையும், பாத்திரங்களையும் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள்.
10 இலட்சத்திற்கு மேற்பட்ட பெறுமதியுடைய பொருட்களை காவல்துறையினர் பலவந்தமாக கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர், மக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பலவந்தமாக சப்பாத்து கால்களுடன் நுழைந்த காவல்துறையினர் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து கொண்டு சென்றனர்.
இவ்வாறு கைது செய்து கொண்டு சென்ற போது சுமார் 3 கிலோமீற்றர் தூரம் வரை நடத்தி விலங்கிட்டு இழுத்துச் சென்றார்கள், இழுத்துச் செல்லப்பட்ட போது மரக்கட்டைகள் தாக்கி கால்களில் காயமும், கை விலங்குகள் இறுக்கியதால் கைகளில் காயங்களும் ஏற்பட்டுள்ளது.
இதன்போது அவர்களில் ஒருவரின் வேட்டியை பலவந்தமாக களைந்து அரை நிர்வாணமான முறையில் கொண்டு சென்றனர், இதன்போது நெடுங்கேணி பொறுப்பதிகாரி வேட்டியை கொடுக்க வேண்டாம் எனக் கூறி இனவாதத்தோடு மிலேச்சத்தனமாக நடத்தியிருக்கிறார்.
ஏனையவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, நீதிமன்ற அனுமதி இருந்தும் காவல்துறையினர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்கள்." என்றார்.
இதேவேளை, கைது செய்யப்பட்டர்களின் வேட்டிகளை களைந்து உள்ளாடைகளுடன் அழைத்து சென்றதை தாம் கண்டதாக ஆலய பக்தர்களும் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.