யாழில் சாந்தனுக்கு நீதி கோரி போராட்டம் - துணைதூதரகத்தை முற்றுகையிட உள்ள போராட்டக்கார்கள்
02 Mar,2024
சாந்தனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
போராட்டமானது யாழ். மருதடி வீதியிலுள்ள இந்திய துணை தூதரகம் முன்பு நாளை (03.03.2024) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
“இந்திய -திராவிட கூட்டுச் சதியால் பலியெடுக்கப்பட்ட சாந்தனிற்கு நீதி கோரி யாழிலுள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட இந்தியத் துரோகத்தை வேரறுக்க தமிழர்களாய் ஒன்றிணைவோம்” எனும் தொனியில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
தாமதத்திற்கு காரணம்
ஒன்றரை வருட போராட்டத்தின் பின் தமிழக அரசு இலங்கைகக்கு வர சாந்தனுக்கு அனுமதியளிக்கப்பட்ட போதும், உடல் நலக்குறைவால் சாந்தன் நேற்று முன் தினம் (28) உயிரிழந்தார்.
உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் நேற்று காலை 11.55 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னையில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
சாந்தனின் பூதவுடலானது இன்றைய தினமே யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்படும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை மற்றும் பயணத்தடை போன்றவையே இந்த தாமதத்திற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உறுதிப்படுத்தப்படவில்லை
சாந்தனின் பூதவுடலுக்கு ஞாயிற்றுக் கிழமை இறுதிக் கிரியை இடம்பெறுவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவரது சகோதரர் மதிசுதன் தெரிவித்துள்ளார்.
அவரது பூதவுடலுக்கு மீள் உடற் கூற்றுப் பரிசோதனை செய்யப் பணிக்கப்பட்டுள்ளதால் இறுதிக் கிரியை இடம்பெறும் திகதியை உறுதிப்படுத்த முடியாதுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.