மூதூர் இந்து இளைஞர் மன்ற காணியில் சட்டவிரோத கட்டுமானத்திற்கு தடை
13 Feb,2024
மூதூர் இந்து இளைஞர் மன்றத்தின் காணியினுள் சிலரால் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுமானத்திற்கு தடைவிதித்து மூதூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த கட்டாணை கட்டளையை மூதூர் மாவட்ட நீதிமன்றம் நேற்றையதினம் (12.02.2024) பிறப்பித்துள்ளது.
குறித்த மன்றத்தின் காணியில் சிலர் அத்துமீறி சட்டத்திற்கு முரணான வகையில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாக இந்து இளைஞர் மன்றத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து மேற்படி வழக்கானது நேற்று நீதிமன்றத்தினால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, வழக்காளியினால், தன் சார்பாக கட்டாணை கட்டளையொன்றினை வழங்குமாறு வழக்காளியின் சட்டத்தரணியான இல்யாஸ் முபாரிஸ் திறந்த மன்றில் சமர்ப்பணம் செய்துள்ளார்.
இதனை ஆராய்ந்த நீதிமன்றம், இவ்வழக்கின் எதிராளியோ, அவரைச் சார்ந்தவர்களோ ஆதனத்திற்குள் அத்துமீறி நுழையக்கூடாதென்றும், அவர்களால் குறித்த ஆதனத்தினுள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற கட்டட நிர்மானப் பணிகளை உடன் நிறுத்துமாறும் தடை செய்கின்ற கட்டாணை ஒன்றினை பிறப்பித்துள்ளது.
குறித்த காணி அபகரிப்பு தொடர்பாக திருகோணமலை பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் 10 ஆம் திகதி குறித்த தரப்பினர் உட்பட, முறைப்பாட்டாளர்களையும் மூதூர் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அழைத்து விசாரணை இடம்பெற்றுள்ளது.
சட்டத்திற்கு முரணான கட்டுமானப் பணிகள்
இதன்போது, ஆவணங்களை பார்வையிட்ட பொலிஸ்மா அதிபர் சம்பந்தப்பட்ட நபர்களை காணிக்குள் நுழையக்கூடாது என எச்சரித்ததோடு விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுமாறும் மன்றத்தினரை பணித்திருந்திருந்தார்.
அதற்கமைய, கடந்த மாதம் 26ஆம் திகதி விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த காணியினுள் பொலிஸாரின் உத்தரவையும் மீறி சட்டத்திற்கு முரணான வகையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.