தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை
07 Feb,2024
சுதந்திரதின போராட்டத்தின் போது, தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
கடந்த 4ஆம் திகதி சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழர் தாயகப்பகுதிகளில் கரிநாள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில், தமிழர்களின் மீது அரசாங்கம் அடக்குமுறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் போராட்டத்தை அடக்கி, தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தன்று பாதுகாப்பு படையினர் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ருத்ரகுமாரன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பிரதான தமிழ் அரசியல் கட்சியான இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
“காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டு போராட்டக்காரர்களை கலைக்க முயற்சித்தனர். மேலும் இந்த போராட்டத்துடன் தொடர்புடைய ஐந்து பல்கலைக்கழக மாணவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.என குற்றஞ்சாட்டினார்.
எனவே, இவ்வாறான தாக்குதல்கள் அடக்குமுறைகளை தடுக்கவும் தாக்குதல் மேற்கொண்டவர்களை தண்டிக்கவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கையை முன்வைத்துள்ளது.