இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு
05 Jan,2024
இஸ்ரேல் நிர்மாணத்துறையில் 20,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவது குறித்து கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலின் நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சின் பிரதிநிதிகளுக்கும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உடன்படிக்கையின் படி 10,000 இலங்கையர்கள்,தொழில் வாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இஸ்ரேலிய வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்காக எந்தவொரு வெளி தரப்பினருக்கும் பணம் வழங்கக் கூடாது எனவும், அவ்வாறு பணம் வழங்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டால், பணம் வழங்கப்பட்டவர்களின் வேலை வாய்ப்பு இழக்கப்படும் எனவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கடந்த காலங்களில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
மேலும், எவரேனும் ஒருவர் தனது பெயரைப் பயன்படுத்தி அல்லது தனது ஊழியர்களின் பெயரைப் பயன்படுத்தி பணம் திரட்ட முற்பட்டால், அத்தகைய ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைபடுத்துமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அமைச்சுக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கும் கடுமையான பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.