தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தற்போது நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரமுடைய அதிபர் முறைமை நீக்கப்பட வேண்டுமென முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், இந்த முறைமையை நீக்குவது தொடர்பான உறுதியை வழங்குவார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஆட்சியாளர்களின் முயற்சி
இலங்கையை கடந்த காலங்களில் ஆட்சி செய்த தலைவர்களும் அரசாங்கங்களும் நிறைவேற்று அதிகாரமுடைய அதிபர் முறைமையை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இந்த முயற்சிகள் அரசியல் காரணங்களுக்காக முறியடிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை நீக்குவதன் முக்கியத்துவத்தை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கள-தமிழ் மக்களுக்கிடையிலான உறவு
சிங்களவர்கள் மற்றும் தமிழர்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்பப்படாவிட்டால் ஒரு நாடாக இலங்கையால் முன்னோக்கி செல்ல முடியாதென கரு ஜயசூரிய கூறியுள்ளார்.
அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் நடவடிக்கைகளின் மூலம் மாத்திரம் தீர்வு காண முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் முயற்சி
கடந்த 2000 ஆம் ஆண்டு, முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறையை நீக்கி புதிய அரசியலமைப்பை உருவாக்க முயற்சித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது ஒரு சிறந்த முன்மொழிவாக கருதப்பட்டாலும் சில அரசியல் காரணங்களினால் அவரால் குறித்த நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது போனதாகவும் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.
இந்த அரசியல் நடவடிக்கைகளின் பின்னணியில், ஐக்கிய தேசியக் கட்சி இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த பின்னணியில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் தொடர்ந்தும் இருப்பதாக முன்னாள் சபாநாயகர் உறுதியாக கூறியுள்ளார்.