தூரத்தில் இருந்து மட்டுமே பார்க்க முடிந்தது..! கேப்டன் பற்றி திருவாரூர் மக்கள் உருக்கம்.!
சந்தனப் பேழையில் எழுதப்பட்டது என்ன தெரியுமா?
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முழுஅரசு மரியாதையுடன் நடைபெற்ற இந்த இறுதிச் சடங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு தனது மரியாதையை செலுத்தினார். அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் முக்கிய சொந்தங்கள் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்.
தேமுதிக நிறுவனரும், மூத்த நடிகருமான விஜயகாந்தின் மரணம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் நிலை குலைய செய்து விட்டது. இன்றைய தமிழ் சமூகத்தில், தவிர்க்க முடியாத, புறக்கணிக்க முடியாத ஆளுமைகளில் ஒருவராக விஜயகாந்த் இருந்துள்ளார் என்பதை அவரது மரணம் நமக்கு உணர்த்தியுள்ளது. விஜயகாந்தின் இழப்பு தமிழகத்தையும் தமிழ் பேசும் உலகத்தையும் தாண்டியிருக்கிறது.
சென்னையில் நடந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்தனர். வெளிமாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்த மக்களால் சென்னை நிரம்பியது. ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அழுதனர். தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்குப் பிறகு, விஜயகாந்தின் மறைவு தமிழக மக்களின் நெஞ்சுருக்கும் சோக நிகழ்வாக அமைந்தது.
விஜயகாந்த் செய்த உதவிகளையும், அவர் நடித்த நடித்த பிரதான பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் ஒன்று மாறி ஒன்றாக மக்கள் நினைவு கூர்ந்தனர். குறிப்பாக, பூந்தோட்டக் காவல்காரன் படத்தில் வரும், ’ ஏழைகள் வாழும் நீ செய்த யாகம்’, சின்னக் கவுண்டர் படத்தில் வரும், ’ அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவனே, அலை ஓசை படத்தில் வரும்’ ‘போராடடா ஒரு வாள் ஏந்தடா" போன்ற பாடல்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் பகிர்ந்து விஜயகாந்த் பற்றிய நினைவுகளை மீளுருவாக்கம் செய்தனர். மக்கள் அழுதனர், மற்றவர்களையும் அழவைத்தனர்.
கருநிறத்தோர், ஒடுக்கப்பட்டோர், பிரதிகூலம் எய்தோர், விளிம்பு நிலையில் உள்ளோர் ஆகியோருக்கான கதாநாயகன் விஜயகாந்த் எனலாம். நெஞ்சிலே துணிவிருந்தால், சாதிக்கொரு நீதி, சிவப்பு மல்லி, சிவந்த கண்கள், சட்டம் சிரிக்கிறது, நீதி பிழைத்தது, அலை ஓசை, வைதேகி காத்திருந்தாள், கேப்டன் பிரபாகரன், பூந்தோட்ட காவல்காரன் போன்ற திரைப்படங்களில் அவரின் பாத்திரங்கள் சமகாலத் தமிழ்ப் பண்பாட்டில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை கேள்வி கேட்பதாக அமைந்ததது.
விஜயகாந்த் என்பவர் சினிமா மூலம் தன்னை சிறப்புறச் செய்கின்ற அதே வேளையில் திரைத்துறையின் ஒட்டுமொத்த பாய்ச்சலையும், அதன் கட்டமைப்பையும் வலுப்படுத்தியவர். வங்கிக் கடனை அடைத்து நடிகர் சங்கத்தின் தாய்பத்திரத்தை மீட்டவர். சினிமாவுக்குள் சமபந்தியை புகுத்தியவர். தமிழ் சினிமாவில் கதாநாயகன் என்பவனை மதிப்பீடு செய்வதற்காக பயன்படுத்தப்படும் அளவுகோல்களை மீறியவர். தமிழ் சினிமாவின் ஆழ அகலங்களை கடந்தவர்.
தமிழக அரசியலை திமுக, அதிமுக என்ற இருபெரும் சக்திகள் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், முதன்முதலில் அதனை வெற்றிகரமாக உடைத்தவர் கேப்டன் விஜயகாந்த். 2011 வருட சட்டப்பேரவை தேர்தலில் 29 தொகுதிகளில் வென்று, திமுகவை பின்னுக்கு தள்ளி பிரதான எதிர்கட்சித் தலைவராக மாறினார்.
உண்மையில் இந்த தமிழ் சமூகம், காய்தல் உவத்தலின்றி, தமிழ் சினிமாவின் வரலாற்றை வாசிக்குமானால், அரசியல் பலமும், திரைத்துறையில் இருந்து ஒதுங்கியிருந்த விஜயகாந்துக்கு இத்தகைய இறுக்கமான இறுதி மரியாதை ஏன் கிடைத்தது என்ற கேள்விக்கான பதில் கிடைக்கும். கேப்டன் விஜயாகாந்தை கொண்டாடித் தீர்த்துவிடும்.