.
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் குறை வளர்ச்சிக்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் கூட்டு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என உரக்க கூறி வைக்க விரும்புகிறேன். நண்பர் இராதாகிருஷ்ணன் இந்த மகத்தான நிகழ்வை நடத்தி, மலையக தமிழ் மக்களின் வரலாற்று, நிகழ்கால அவலங்களை, உரை, கலை வடிவங்களில் இந்த மேடையில் கூற வைத்து விட்டார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில் எனக்கு ஒரு கடப்பாடு இருக்கிறது. வரலாறு, நிகழ்கால அவலங்களுக்கு அப்பால் நாம் இன்று எங்கே, எப்படி நிற்கிறோம், எங்கே, எப்படி போக வேண்டும் என்ற எதிர்காலம் கூற வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
மலையக மக்கள் முன்னணி சார்பில் இராதாகிருஷ்ணன் எம்பி தலைமையில் நுவரேலியாவில் நடைபெற்ற 200ல் மலையக மாற்றம் விழாவில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்திய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,
இந்நாட்டின் சிங்கள, ஈழத்தமிழ், முஸ்லிம் சகோதர இனத்தவர் தங்கள் ஓட்டங்களை 1948லேயே ஆரம்பித்து விட்டார்கள். மலையக தமிழர் தமது குடியுரிமையை சட்டப்படி முழுமையாக பெற்றுக்கொள்ளவே 2003ம் வருடம் ஆகிவிட்டது. ஆகவே நாம் எமது ஓட்டத்தை தாமதமாக ஆரம்பித்த பிரிவினர் ஆகும். ஆகவே எமது அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார அடைவுகள், சகோதர இனத்தவர்கள் அடைந்துள்ள, இலக்குகளை விட குறைவாக இருப்பது ஆச்சரியம் அல்ல. ஆனால், இந்த இருபது வருடங்களில் ஏனையோர் மரதன் ஓடும்போது நாம் நூறு மீட்டர் ஓடி வேகமாக பல முன்னேற்றங்களை கண்டுள்ளோம். எனினும் இன்னமும் நாம் போக வேண்டிய தூரம் கணிசமாக இருக்கிறது.
நாம் அடையவேண்டிய வளர்ச்சியை அடையாமல் குறைவளர்ச்சியில் நிற்கிறோம். மலையக தமிழரின் குறை வளர்ச்சிக்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் கூட்டு பொறுப்பேற்க வேண்டும்.
ஜனாதிபதி ரணில் பாராளுமன்றம் வரும் போதெல்லாம், 1948ல் இலங்கையின் அந்நிய செலவாணி தொகை ஆசியாவிலேயே ஜப்பானுக்கு அடுத்தபடியாக அதிகமாக இருந்தது என்று பெருமையாக கூறுவார். அது உண்மை. அதன் பின்னுள்ள கசப்பான உண்மை என்ன? அந்த அதிக தொகை அந்நிய செலவாணியை இரத்தம், வியர்வை, கண்ணீர் சிந்தி பெற்று தந்தது நமது மக்களின் தேயிலை, இறப்பர் பெருந்தோட்ட உழைப்பினால் கிடைத்த ஏற்றுமதி வருமானம் ஆகும். ஆனால், இதற்காக 1948லேயே முதல் சுதந்திர இலங்கை அரசு எமக்கு செய்த கைம்மாறு என்ன? எமது குடியுரிமையையும், வாக்குரிமையையும் பறித்து எம்மை நாடற்ற மக்கள் ஆக்கியதே அந்த கைம்மாறு ஆகும்.
1964ல் எம்மை கலந்தாலோசித்து எமது உடன்பாடுகளை பெறாமலேயே இந்திய அரசு, எம்மில் பெரும்பான்மையோரை நாடு கடத்த உடன்பாடு தெரிவித்தது. அன்று ஏற்படுத்தப்பட சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் மூலமாக எமது மக்கள் கால்நடைகள் போல் நாடு கடத்தப்பட்டு, இங்கே நாம் அரசியல்ரீதியாக பலவீனபடுத்தப்பட்டோம். இந்த ஒப்பந்தம் எமக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் ஆகும்.
1972 வரை நாம் குடியரசு ஆகவில்லை. அதுவரை பிரிட்டிஷ் மகாராணியார் தான் எமது தேசத்தலைவராக இருந்தார். நாம் டொமினியன் சிலோன் என்ற நாடாக இருந்தோம். எம்மை 200 வருடங்களுக்கு முன்னர் இங்கே கொண்டு வந்தவர்களும் அவர்கள்தான். 1948ல் எமது குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்ட போதும், 1964ல் நாடு கடத்தல் ஒப்பந்தம் செய்யப்பட்ட போதும் பிரிட்டிஷ் மகாராணியார் கண்ணை மூடிக்கொண்டு இருந்தார். இந்த ஒப்பந்தம் பிரிட்டிஷ் அரசால் எமக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் ஆகும்.
இந்த வரலாற்றின் காரணமாக, எமது எதிர்கால வளர்ச்சிக்கு உதவிட வேண்டிய தார்மீக கடப்பாடு இன்று, இந்திய, பிரித்தானிய அரசுகளுக்கு உண்டு. அதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், இங்கிலாந்து பிரதமர் ரீஷி சுனக் அவர்களும் நிறைவேற்ற வேண்டும் எனக்கோருகிறேன். கடந்த வாரம் நானும், இராதாகிருஷ்ணனும் இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் தூதுவர் அன்ரூ பெட்ரிக்கை சந்தித்த போது, இதை நான் அவருக்கு தெளிவாக எடுத்து கூறினேன். அவரது இன்றைய பிரிட்டிஷ் மன்னர் சார்ள்சின் அரசு எமக்கு உதவிட வேண்டும். இந்தியாவின் கடப்பாடு பற்றி நான் பலமுறை இந்திய தலைவர்களிடம் எடுத்து கூறியுள்ளேன்.
இலங்கையின் கடப்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார் திசாநாயக்க ஆகியோர் நிறைவேற்ற வேண்டும். எனது கருத்தை இவர்களுக்கும் நான் பலமுறை எடுத்து கூறியுள்ளேன்.