சுயநினைவின்றி செயல்படும் காவல்துறையினர்,மனோ கணேசன் குற்றச்சாட்டு
20 Dec,2023
சிறிலங்கா காவல்துறையினர் சுயநினைவின்றி செயல்படுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சுயநினைவுடன் காவல்துறையினர் செயல்பட்டிருந்தால், அவர்கள் தற்புாது முன்னெடுத்துள்ள சோதனை நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே அறிவித்திருக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெறுமதி சேர் வரிகள்
இதேவேளை, இலங்கையில் பெறுமதி சேர் வரிகளை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அரசாங்கம் தன்னிச்சையாக குறித்த நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கையில் பெறுமதி சேர் வரி எதற்கு? நாட்டின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டுமா?
அதிகரிக்கப்பட வேண்டிய வருமானம்
இலங்கையின் வருமானம் அதிகரித்தால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களை மீள செலுத்த முடியும்.
இந்த நிலையில், வெளிநாட்டு முதலீடுகளின் மூலம் இலங்கையின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். மாறாக வரிகள் மூலம் அல்ல.
அத்துடன், இலங்கையில் உள்ள செல்வந்தர்கள் பல கோடி ரூபாவை அரசாங்கத்துக்கு வரியாக செலுத்த வேண்டியுள்ளது.
இந்த வரிகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.