பலாங்கொடை பிரதேசத்தில் மண்சரிவு அபாயம், வவுனியா வடக்கில் 22 குடும்பங்கள், 84 பேர் இடம்பெயர்வு
16 Dec,2023
பலாங்கொடை - உடவெல பிரதேசத்தில் இருந்து உட எல்லேபொல வரையான பகுதிகள் மண்சரிவு அபாயம் மிக்க இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் அவதானத்துடன் இருக்குமாறு பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொடை பிரதேசத்தில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பலத்த மழை காரணமாக வவுனியா வடக்கில் 22 குடும்பங்கள், 84 பேர் இடம்பெயர்வு
நாட்டில் பெய்யும் பலத்த மழை காரணமாக வவுனியா வடக்கில் 22 குடும்பங்களை சேர்ந்த 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (16) தெரிவித்துள்ளது.
அத்துடன், இலுப்பை பகுதியில் 05 குடும்பங்களை சேர்ந்த 22 பேரும், சின்னடம்பன் பகுதியில் 09 குடும்பங்களை சேர்ந்த 35 பேரும் இடம்பெயர்ந்து இரு பொது மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நைனாமடு பகுதியில் 02 குடும்பங்களை சேர்ந்த 06 பேரும், நெடுங்கேணியில் 06 குடும்பங்களை சேர்ந்த 21 பேரும் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.