கொட்டித் தீர்த்த கடும் மழை - கிளிநொச்சியில் வெள்ளம்!
15 Dec,2023
கிளிநொச்சியில் நேற்று பெய்த கடும் மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சியில் வியாழக்கிழமை கடும் மழை பெய்தது. இதனால், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கணை ஆகிய பிரதேசங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ள்ளாகியுள்ளனரை். பலர் தங்களின் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
அத்தோடு தர்மபுரம் மத்திய கல்லுரி மற்றும் தருமபுரம் இலக்கம் ஒன்று பாடசாலைக்கு உள்ளும் மழைநீர் உட்புகுந்தமையால் இப் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டது.
நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக பெய்த கடும் மழையால் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று நண்பகல் வரை 394 குடும்பங்களை சேர்ந்த 1,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். கரைச்சி பிரதேச செயலக பிரிவில் மாயவனூர், மருதநகர், மாவடியம்மன் கிராமங்களும், கணடாவளை பிரதேச செயலக பிரிவுகளில் பெரியகுளம், பிரமந்தனாறு, தர்மபுரம் கிழக்கு, தர்மபுரம் மேற்கு புண்ணைநீராவி, குமாராசாமிபுரம், புளியம்பொக்கனை கிராமங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இந்த பாதிப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.