இன- மத நல்லிணக்கமாகவும் மனித உாிமைப் பாதுகாப்பு விவகாரமாகவும் சுருக்கமடைந்து வரும் இனப் பிரச்சினை விவகாரம்.
2015 இல் நிலைமாறுகால நீதி என மார் தட்டியமை மிகப் பெரும் சா்வதேச அரசியல் தவறு. அதேநேரம் சுயநிர்ணய உரிமை, இன அழிப்பு விசாரணை குறித்து தொழிற் கட்சி உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால் அமைச்சர் லியோ டொச்செரி அதற்குப் பதலளிக்க மறுத்துவிட்டார். மாறாக மனித உரிமை மீறல் விவகாரம் என்ற தொனியில் மாத்திரமே அமைச்சரின் பதில் இருந்தது.
ஈழத் தமிழர் விவகாரம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் இலங்கைத்தீவில் நல்லிணக்கம், மத நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு என்ற பேச்சுக்களுக்கு மாத்திரமே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.
தமிழர்கள் ஒரு ”தேசிய இனம்” என்பதும் கட்டமைக்கப்பட்ட ”இன அழிப்பு” தொடர்கிறது என்ற நியாயமான கருத்தும் விவாதத்தில் சேர்க்கப்படவில்லை.
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உாிமைக்கான அவசியம் மற்றும் இன அழிப்பு என்ற வாதத்தைச் சில எதிர்க் கட்சி உறுப்பினா்கள் எடுத்துரைத்திருந்தாலும் பிாித்தானிய அரசாங்கம் அதற்குப் பதில் வழங்கவில்லை.
ஈழத்தமிழர்கள் குறித்த விவாதத்தை ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் (Scottish National Party) நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தலைமையில் இந்த விவாதம் இடம்பெற்றிருந்தது.
வன்முறை மற்றும் இனப்படுகொலையின் சுழற்சியுடன் துரதிர்ஷ்டவசமாக தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் உயிர் பிழைத்த தமிழர்களை மேலும் துன்புறுத்துவதாக மார்ட்டின் டே தனது விவாதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் தொழிற் கட்சி உறுப்பினர்கள் பலரும் விவாதத்தில் பங்குபற்றினர்.
ஆனால் விவாதத்தில் உரையாற்றிய பிரித்தானிய அரசதரப்பு உறுப்பினர்கள் பலரும் இலங்கைத்தீவில் நடப்பது மனித உரிமை மீறல் விவகாரம் என்ற தொனியிலும் இலங்கை ஒற்றையாட்சி அரசைப் பாதுகாக்கும் முறையிலும் கருத்துக்களை அதிகளவில் முக்கியப்படுத்தியிருந்தனர்.
இந்த விசேட விவாதம் நாடாளுமன்றத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பிரித்தானிய நேரப்படி பிற்பகல் இரண்டு முப்பதில் இருந்து நான்கு முப்பது வரை இடம்பெற்றது.
ஆனால் இது பொறுப்புக்கூறலிற்கான பாதையையோ அல்லது உரிய சாட்சியங்கள் பாதுகாப்பு பொறிமுறையையோ ஏற்படுத்தாது என்ற கரிசனை காணப்படுவதாக மார்ட்டின் டே விவாதத்தில் எடுத்துரைத்திருந்தார்.
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அவசியமானது என்றும் மார்ட்டின் டே தனது விவாத்தில் நியாயப்படுத்தியிமிருந்தார்.
உறுப்பினர்களின் உரைகள் முடிவடைந்த பின்னர் வெளிவிவகார பொதுநலவாய விவகாரங்களுக்கான அமைச்சர்களில் ஒருவரான லியோ டொச்செட்ரி பதிலளித்தார்.
ஆனால் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் இன்மை உள்ளிட்ட முக்கியமான விவகாரங்களுக்கு அமைச்சர் லியோ டொச்டெரி பதிலளிக்கவில்லை.
ஆனாலும் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளையும் மீறி இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதாக அமைச்சர் லியோ டொச்செரி குற்றம் சுமத்தினார்.
இலங்கைத்தீவில் ”இன நல்லிணக்கம்” ”மத நல்லிணக்கம்” ஏற்பட வேண்டும் என்பது பற்றியும் அமைச்சர் தனது பதிலில் முக்கியப்படுத்தியிருந்தார். இன அழிப்பு மற்றும் சுயநிர்ணய உரிமை பற்றிய கேள்விகளுக்கு அமைச்சர் லியோ டொச்செரி தனது பதிலில் கவனம் செலுத்தவில்லை.
மாறாக இலங்கை ஒற்றையாட்சி அரசைக் காப்பாற்றும் உத்திகள் அமைச்சரின் பதிலில் தென்பட்டன.
மனித உரிமைகள் விடயத்தில் பிரிட்டனின் கரிசனைக்குரிய முப்பத்தியிரண்டு நாடுகளில இலங்கையும் ஒன்று என்ற விடயத்தில் பிரித்தானியா கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் தனது பதிலில் மேற்கோள் காண்பித்திருந்தார்.
ஈழத் தமிழர்கள் பற்றி உறுப்பினர்கள் மனதை வருத்தும் விதத்தில் வலுவான விவாதங்களை இங்கு முன்வைத்ததாகவும் குறிப்பிட்ட அமைச்சர் லியோ டொச்செரி, இலங்கையில் பல வருடகாலமாக இன மத பதற்றங்கள் நிலவுவதாகவும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது ஒடுக்கு முறைக்குள்ளாக்கப்படுவது பிரித்தானியாவுக்கு நன்கு தெரியும் எனவும் எடுத்துரைத்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச தராதரத்தில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து இலங்கை அரசு வாக்குறுதி வழங்கியிருந்தது.
ஆனாலும் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து பிரித்தானிய அரசாங்கம் அவதானித்துள்ளது என்றும் அமைச்சர் தனது பதிலில் கூறினார்.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் மற்றும் நினைவுகூரலிற்கு எதிரான பொலிஸாரின் கடுமையான நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை இலக்குவைத்து வடக்குக் கிழக்கில் இலங்கைப் படையினரின் கண்காணித்தல்கள், மிரட்டல்கள் தொடருவதாக அமைச்சர் தனது பதிலில் விளக்கியிருக்கிறார்.
முன்னாள் போராளிகளும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் கண்காணிக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றனர்.
எனவே பிரித்தானிய நாடாளுமன்றம் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைக் கருத்தில் கொண்டுள்ளது எனவும் அமைச்சர் லியோ டொச்செரி விளக்கமளித்திருக்கிறார்.
புலம்பெயர் அமைப்புகளின் கோரிக்கையினால் பிரித்தானிய அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்குழு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதமும் இவ்வாறான விவாதம் ஒன்றை நடாத்தியிருந்தது. இலங்கை அரசாங்கத்தின் மீது கண்டனமும் வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் அந்த விவாத்திலும் பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாடு இலங்கை மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் நல்லிணக்கம் என்ற கருத்துக்களை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டிருந்தது.
இறுதிப் போர் நடைபெற்ற 2009 இல் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன 2015 ஜனவரியில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றியிருந்தார்.
”நல்லாட்சி அரசாங்கம்” எனப் பெயர் சூட்டப்பட்டு பிரித்தானிய, அமெரிக்க மற்றும் இந்திய அரசுகளின் ஆதரவுடன் மைத்திரி – ரணில் அரசாங்கம் பதவி வகித்திருந்தாலும் ஈழத்தமிழர் விவகாரத்தில் எதுவும் நடக்கவில்லை.
குறிப்பாக 2015 இல் நிலைமாறுகால நீதி என சா்வதேசத்தினால் சித்தரிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஈழத்தமிழர் விவகாரத்துக்கு அது பொருத்தமானதாக அமையவேயில்லை. தோல்வியடைந்தது.
ஏனெனில் தென்னாபிரிக்காவில் அரசியல் விடுதலைப் போராட்டம் நடத்திய கறுப்பின மக்களிடம் முழு அதிகாரங்களும் வழங்கப்பட்ட நிலையிலேதான் அஙகு நிலைமாறு கால நீதி சாத்தியமானது.
ஆனால் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை 2015 இல் ஜனாதிபதியாக்கிவிட்டு தமிழர் விவகாரத்தில் நிலைமாறுகால நீதி என மார் தட்டியமை மிகப் பெரும் சா்வதேச அரசியல் தவறு.
இது தொடர்பாக தொழிற் கட்சி உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது அமைச்சர் லியோ டொச்செரி அதற்குப் பதலளிக்க மறுத்துவிட்டார். ஈழத்தமிழர்கள் தொடர்பாக மார்ட்டின் டே முன்வைத்த கோரிக்கைகளுக்கு பொறுப்பான பதிலை அமைச்சர் வழங்கவுமில்லை.
கிழக்கு மாகாண பிரச்சினைகள் பற்றி எதுவுமே பேசப்படவில்லை. வடக்குக் கிழக்கு என்று விவாத்தில் கூறப்பட்டிருந்தாலும் வடக்கு மாகாண பிரச்சினைகள் பற்றியே அமைச்சர் லியோ டொச்செரி தனது பதிலில் அதிக கவனம் செலுத்தியிருந்தார்.
மட்டக்களப்பு மேய்ச்சல் தரையில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று அங்கு கால்நடைகள் அழிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பாகப் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட இப் பிரச்சினை மிகச் சமீபகாலத்தில் உருவானது என்ற தவறான கருத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
மட்டக்களப்பில் மேய்ச்சல் தரையில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் விவகாரம் 2009 இற்கு முற்பட்ட காலத்தில் இருந்தே உருவாகியுள்ளது.
உண்ணிச்சை மேய்ச்சல்தரை நிலங்கள் அபகாரிக்கப்பட்டுச் சிங்கள விவசாயிகள் குடியேற்றம் செய்யும் ஏற்பாடுகள் அன்று இடம்பெற்றிருந்தன.
மேய்ச்சல்தரை விவகாரம் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல் தொடர்பாக இந்த விவாதத்தில் கவனம் செலுத்தப்படவில்லை.
தமிழர் விவகாரத்தில் சிங்கள ஆட்சியாளர்களின் கூட்டுப் பொறுப்பு என்ன என்பது பற்றிப் பேசப்படவுமில்லை. ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டால் அதனை நல்லிணக்கமாகக் காண்பிப்பது மத நல்லிணக்கமாகக் கூறுவது போன்ற கருத்துப் பரிமாற்றங்கள் அதிகளிவில் தென்பட்டன.
2019 இல் இலங்கைத்தீவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு ஒப்பான விசாரணைகளையே முப்பது வருட போரின் போதும் அதற்கு முந்திய தமிழர் படுகொலை பற்றிய விசாரணைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து பிரித்தானிய அரசாங்கத்தரப்பில் இருந்து வெளிப்பட்டது.
ஒரு முழுமையான இன அழிப்பு மற்றும் சர்வதேச நீதிமன்ற விசாரணைக்குரிய பரிந்துரைகள் எதுவும் இல்லை.
விவாதத்தில் உரையாற்றிய உறுப்பினர்களின் கருத்தின் பிரகாரம், ததத்தமது தேர்தல் தொகுதிகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அதிருப்தி தெரிவிப்பதாகவும் இலங்கை அரசின் மீது சா்வசேத்தினால் எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்ற தொனி தெளிவாகத் வெளிப்பட்டன.
ஆகவே ஈழத்தமிழர்களின் அழுத்தங்களினால் இந்த விவாதம் நடைபெற்றிருக்கின்றது என்று பகிரங்கமாக கூற முடியும்.
ஆனால் இன அழிப்பு தொடர்பான சர்வதேச விசாரணையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்ற அழுத்தமும் அதற்கான விபரங்களும் உரிய முறையில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் புலம்பெயர் அமைப்புகளினால் கையளிக்கப்படவில்லை என்பது புரிகிறது.
குறிப்பாக 1958 இல் இருந்து கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு என்பதற்குரிய ஆவணங்கள் கையளிக்கப்படவில்லை.
இதன் காரணமாகவே சர்வதேசம் வழமையாக மார்தட்டுகின்ற ”இன நல்லிணக்கம்” ”நிலைமாறு மாறுகால நீதி” மற்றும் ”மத நல்லிணக்கம்” பற்றிய பேச்சுக்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது எனலாம்.
தமிழர் குறித்த அமெரிக்க இந்திய அரசுகளின் நோக்கங்களுக்கு மாறாக பிரித்தானிய அரசும் இயங்குவதற்குரிய வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால் புலம்பெயர் அமைப்புகள் உரிய முறையில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு என்பதற்கு ஆவணங்களைத் தயார்படுத்தி வழங்கியிருந்தால் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரம் என்பது இயல்பாகவே பேசப்பட வேண்டிய சூழல் உருவாகியிருக்கும்.
ஆனால் அதற்குரிய வேலைத்திட்டங்களைத் தாயகத்தில் உள்ள தமிழ்த்தேசியக் கட்சிகள் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் ஒருமித்த குரலில் முன்னெடுக்கத் தவறியுள்ளன.
அவ்வாறு செயற்பட்டிருந்தால் பிரித்தானிய நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சரியான நியாயப்படுத்தல்களை முன்வைத்திருப்பர். பிரித்தானிய அரசாங்கமும் அதற்குரிய பதிலை வழங்கியிருக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டிருக்கும்.
சுமாதானப் பேச்சு ஆரம்பிக்கப்பட்டவிருந்த 2001 இல்தான் பிரித்தானியா விடுதலைப் புலிகள் மீது தடை விதித்திருந்தது.
ஆனால் இதுவரையும் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை இராணுவத் தளபதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட சிங்கள அரசியல் தலைவர்கள் பலருக்குப் பிரித்தானிய அரசாங்கம் தடை விதிக்கவேயில்லை.
இந்த நிலையில் சில புலம்பெயர் அமைப்புகளின் அழுத்தம் காரணமாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் பாரிய தாக்கத்தைச் செலுத்துமெனக் கூற முடியாது. இதற்காகப் புலம்பெயர் அமைக்குள் இன்னமும் கடுமையாக உழைக்க வேண்டிய தேவையுமுள்ளது.
தனித்தனியாகப் பிரிந்தல்ல. ஒருமித்த குரலில் ஒரு அணியாக நின்று செயற்பட்டால் இது இலகுவாகச் சாத்தியமாகும்.