அரசாங்கத்துக்கு வெள்ளையடிக்கும் உலக தமிழர் பேரவை :
10 Dec,2023
கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!
இலங்கைக்கு பயணம் செய்துள்ள உலக தமிழர் பேரவையை சந்திக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மறுத்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இலங்கையை வந்தடைந்த பேரவையின் உறுப்பினர்கள், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பௌத்த பீடங்களின் முக்கிய தேரர்களை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுத்திருந்தனர்.
பேரவையினரின் குறித்த நடவடிக்கை, இலங்கையிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சந்திக்க வேண்டுமென பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் கோரியுள்ளார்.
இதனை நிராகரித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பேரவையின் உறுப்பினர்களுடன் தமக்கு பேச எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் நிறைவுக்கு வந்ததிலிருந்து, நாட்டிலுள்ள தமிழ் மக்கள் பாரிய அழுத்தங்களை எதிர்நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதோடு, கடந்த 27 ஆம் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல்களின் போது தமிழ் மக்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதையும் நினைவூட்டியுள்ளார்.
அரசிற்கு பாரிய அழுத்தம் வழங்க வேண்டிய காலகட்டத்தில், தாயகத்தில் எவருடனும் கலந்தாலோசிக்காமல் அரசிற்கு வெள்ளையடிக்கும் வேலையையே GTF செய்வதாக தெரிவித்துள்ள கஜேந்திரகுமார் எம்பி அவர்களை சந்திக்கவும் மறுப்பு.
இந்த பின்னணியில், குறித்த விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறிலங்கா அரசாங்கத்துக்கு உலக தமிழர் பேரவை அழுத்தம் கொடுக்க வேண்டுமான போதிலும், இதனை விடுத்து அவர்கள் அரசாங்கத்துக்கு வெள்ளையடிப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் தாயகத்தில் எவருடனும் பேரவையின் உறுப்பினர்கள் கலந்தாலோசிக்கவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.