மாவீரர் நாளான இன்று அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலேயே ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாவீரா் மில்லருக்கு நினைவஞ்சலி
மாவீரா் நாளான இன்று முதலாவது கரும்புலி மாவீரா் மில்லாின் நினைவாக நெல்லியடி மத்திய கல்லூரியின் முன்பாக நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினா் இந்த நினைவேந்தலை மேற்கொண்டனா்.
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி
யாழ்ப்பாணம் - கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தின் 522 ஆவது பிரிகேட் முகாம் முன்பாக இன்றைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் தற்பொழுது இராணுவத்தின் 522 வது பிரிகேட் தலைமையகமாக இயங்கி வருகின்றது.
இந்நிலையில் இன்றையதினம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினரால் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
ரேவடி கடற்கரையில் கடற்புலி மாவீரர்களுக்கான நினைவேந்தல் (இரண்டாம் இணைப்பு)
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் கடற்புலி மாவீரர்களுக்கான நினைவேந்தல் இடம்பெற்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பில் இருந்து மாவீரர்களாக உயிர்நீத்தவர்களுக்கு இதன்போது அஞ்சலிக்கப்பட்டது.
இதன்போது மாவீரர் பண்டிதரின் தாயார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாவீரர் நாளான இன்று மாவீரர்கள் நினைவாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோப்பாய் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்தது அழிக்கப்பட்டு , தற்போது இராணுவத்தினரின் 51ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.