பாரிஸ் அருகே புலம்பெயர் பெண்கள் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது!
26 Nov,2023
வடக்கு பாரிஸ் புறநகரில் உள்ள கட்டிடத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பெண்கள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் சிறார் உட்பட 7 பேர் காயங்களுடன் தப்பியுள்ளதாவும் கூறப்படுகிறது. காயங்களுடன் தப்பிய குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிசார் தெரிவிக்கையில், உள்ளூர் நேரப்படி 2 மணியளவில் ஸ்டயின்ஸ் பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தின் தரைத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புலம்பெயர் மக்கள் அதிகம் வசித்துவரும் இப்பகுதியானது பாரிஸ் நகரில் இருந்து 9 மைல்கள் தொலைவு என்றே கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும் ஹைட்டியில் பிறந்தவர்கள் என்றும் மூன்றாவது மாடியில் வாடகைக்கு குடியிருந்த ஒரு பெண், அவரது சகோதரி மற்றும் இரவு உணவிற்குப் பிறகு தங்கியிருந்த ஒரு நண்பர் ஆகியோர் காயங்களுடன் தப்பியவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மரணமடைந்த மூவரின் சடலங்களையும் தீவிர தேடலுக்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். காயங்களுடன் தப்பிய சிறார் 6 வயது சிறுவன் என்றே கூறப்படுகிறது. தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவன் தனது பெற்றோர் மற்றும் இரண்டு வயது சகோதரியுடன் முதல் மாடியில் வசித்து வந்ததாகவும், தீ விபத்தில் அவர்களும் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, இருபத்தி நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 88 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடியதாகவும் ஒரு தீயணைப்பு வீரர் லேசாக காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கட்டிடத்தில் வசிக்கும் மற்ற குடிமக்கள் வெளியேற்றப்பட்டு விளையாட்டு அரங்கில் தங்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது