28ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை
16 Nov,2023
,
15 முதல் 28ஆண்டுகளாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மீது கடந்த 2006 ஓகஸ்ட் (14)ஆம் திகதி, நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு, 16ஆண்டுகளாக விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகளை, 'நிரபராதிகள்' எனத் தெரிவித்த கொழும்பு மேல் நீதிமன்றம் அவர்களை (10.11.2023) அன்று விடுதலை செய்தது.
இவர்கள் விடுதலையாகி வருகின்றபோது, அங்கு சிறையில் மீதமிருக்கும் உறவுகள், "தங்களையும் உயிருடன் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்!" எனக்கூறி விழிகலங்க வழியனுப்பி வைத்ததாக விடுதலை பெற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
,
இவர்களின் விடுதலை தொடர்பில் தீவிரமாகச் செயற்படும் குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் தெரிவித்துள்ளதாவது, “சந்தேகநபர்களாக நீண்டகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு அரசியல் கைதிகளும் காலதாமதமின்றி விடுவிக்கப்படவேண்டும்.
,
அத்துடன், 15முதல் 28ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகள் 10பேரையும், அதிபர் பொதுமன்னிப்பளித்து விடுவித்து அவர்களது எஞ்சியுள்ள வாழும் காலத்தையேனும் மெய்யுறுதி செய்ய அவர்களை உயிர்ப்புடன் விடுவிக்க வேண்டுமென, ஒரு மனிதநேய அமைப்பாக நாம் வினயமுடன் கோருகிறோம்.
எவ்வாறாயினும், கடந்த பல வருடங்களாக தமிழ் அரசியல் கைதிகளின் பொது நன்மைக்கென்று குரலுயர்த்தி வருகின்ற 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பானது, மீதமுள்ள 14தமிழ் அரசியல் கைதிகளினதும் விடுதலை வாழ்வு மெய்ப்படும் வரையில், நடைமுறைக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் தளர்வுறாது செயற்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்” எனத் தெரிவித்தனர்.