இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'நாம் 200' நிகழ்வு நாளை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பையேற்று இந்நிகழ்வில் இந்திய அரசின் பிரதிநிதியாகவே இந்திய நிதி அமைச்சர் பங்கேற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இலங்கைக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கைக்கு வரும் அமைச்சர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் முக்கிய இடங்களையும் பார்வையிடவுள்ளார்.
அத்துடன், அமைச்சர் இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்த 200 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நாளை 2ஆம் திகதி வியாழக்கிழமை, கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'நாம் 200' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
இதேவேளை, நாளையதினம் கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் “இணைப்பை மேம்படுத்துதல் : செழுமைக்கான கூட்டு” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்திய - இலங்கை வர்த்தக உச்சி மாநாட்டில் முக்கிய உரையாற்றவுள்ளார்.
அமைச்சர் நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் சில இடங்களை பார்வையிடவுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோயில், யாழ்ப்பாணம் கலாச்சார மையம் மற்றும் யாழ் பொது நூலகம் ஆகியவற்றை பார்வையிடவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையையும் (SBI) இந்திய நிதி அமைச்சர் திறந்து வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.