காஸாவில் வைத்தியசாலை மீதான தாக்குதலை கண்டிப்பவர்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் எதுவும் கதைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இஸ்ரேல், பலஸ்தீன் பகுதிகளில் இடம்பெறும் கொலைகளுக்காக எமது கண்டனங்களை தெரிவிக்கின்றோம். அங்கு பாரியளவில் மனித அவலங்கள் இடம்பெற்று வருகின்றன.
அது சிறிய நாடாக இருந்தாலும் நாங்கள் ஒன்றும் தெரியாதது போன்று நடு நிலையாக இருந்துவிட முடியாது. சரி பிழைகள் தொடர்பில் கூற வரவில்லை இரு தரப்பின் நியாயங்கள் , அநியாங்கள் தொடர்பில் கதைப்பதற்கான நேரமல்ல.
வன்முறைகளை எதிர்க்க வேண்டும். இரு தரப்பினரும் யுத்தத்தை நிறுத்தி மனித அவலங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீண்ட காலமாக நாங்களும் இவ்வாறான யுத்தம் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு யார் பொறுப்பாளிகள். அத்துமீறியவர்களையே நாங்கள் இனங்காண வேண்டும்.
முதலில் அவல யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும். நாடுகள் வன்முறைகளின் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முயல்கின்றன.
இந்த காலத்தில் அதற்கு இடமளிக்க முடியுமா? அதனை ஏன் தீர்த்து வைக்க முடியவில்லை. பேச்சுவார்த்தைகள், மத்தியஸ்தம் வகித்தல் ஆகியன மூலம் தீர்வுகளை காணலாம்.
உலகில் பல பகுதிகளில் சண்டைகள் நடக்கின்றன. உக்ரேன் மத்திய கிழக்கு நாடுகளில் சண்டைகள் நடக்கின்றன. மத்திய கிழக்கில் நடக்கும் விடயங்களின் தாக்கங்களை நாங்கள் மூன்று தசாப்தங்களாக அனுபவித்துள்ளோம்.
வைத்தியசாலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எமது நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
காஸாவில் வைத்தியசாலை மீதான தாக்குதலை கண்டிப்பவர்கள் இங்கே வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் எதுவும் கதைக்கவில்லை.
இங்கேயும் அரச பயங்கரவாதமே இருந்தது. எவ்வகையாக வன்முறையாக இருந்தாலும் அவை கண்டனத்திற்குரியதே. இஸ்ரேல் காஸாவை விட்டு விலக வேண்டும். எவராக இருந்தாலும் மக்கள் உயிர்களை பறிக்க எந்த உரிமையும் கிடையாது.
இங்கே சிலர் இரட்டை வேடத்துடன் செயற்படுகின்றனர். அரசியல் ரீதியான பிரச்சினையே பல நாடுகளில் நடக்கின்றன. அவற்றை அரசியல் ரீதியில் தீர்க்க முடியும். இங்கேயும் அதே நிலைமையே இருக்கின்றது.
அரசியல் தீர்வாக இராணுவ தீர்வு அமைய முடியாது என்று மஹிந்த ராஜபக்ஷ் கூறினார். ஆனால் இறுதியில் அவர் இராணுவ தீர்வையே முன்னெடுத்தார்.
எவ்வாறாயினும் இவ்வாறான வன்முறைகளை அனுமதிக்க முடியாது. இவற்றை கண்டிக்க வேண்டும். துன்பப்படும் மக்கள் யாராக இருந்தாலும் நாங்கள் ஒற்றுமையுடன் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றார்.