முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தப்பட்டதைக் கண்டித்தும், அவருக்கு நீதி வேண்டியும், வடக்கு கிழக்கில் இன்று முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கட்சிகளினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்துக் ஆதரவு தருமாறு அனைத்து தரப்பினரிடமும் கோரிககை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய போராட்டத்தினால், போக்குவரத்து சேவைகள் முடங்கும் என்றும், வர்த்தக நிலையங்கள் மூடப்படும் என்றும், வழமை நிலை பாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பாடசாலைகளையும் புறக்கணிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் முற்றாக முடங்கியது!
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையில் 7 தமிழ் அரசியல் கட்சிகளால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் பூரண கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண மத்திய பேரூந்து நிலையம், யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி,ஸ்ரான்லி வீதி, ஆஸ்பத்திரி வீதி, முனிஸ்வரா வீதி, கே.கே.எஸ் வீதி ஆகியவற்றில் கடைத்தொகுதிகள் மூடப்பட்டு காட்சியளித்தன.
வெறிச்சோடிய நிலையில் யாழ்ப்பாணம் மத்திய நகரப்பகுதி காணப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது. அரச நிறுவனங்கள் அனைத்தும் திறந்துள்ளன. தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை.
நெல்லியடி, பருத்தித்துறை, சாவகச்சேரி, கொடிகாமம், நகரங்களும் இயல்பு நிலையை இழந்திருந்தன.
திருகோணமலையிலும் ஹர்த்தாலுக்கு ஆதரவு!
முல்லைத்தீவு நீதிபதி டி.சரவணராஜாவுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரச்சினை உட்பட பல விடயங்களை கண்டித்து தமிழ் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்த ஹர்த்தால் இன்று திருகோணமலை மாவட்டத்திலும் அனுஷ்டிக்கப்பட்டது.
திருகோணமலை நகர் பகுதியில் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக காணப்படுவதுடன் மாணவர்களை பெற்றார்கள் வந்து அழைத்து செல்கின்றனர். இருந்த போதிலும் ஒரு சில கடைகள் பூட்டப்பட்டிருந்தாலும் வழமை போன்று கடைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளும் இயங்கி வருவதுடன் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது.
பொது போக்குவரத்து வழமை போன்று இடம் பெற்றாலும் குறைவானவர்களே பயணத்தில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகிறது.
மட்டக்களப்பில் ஹர்த்தால் - இயல்பு நிலை பாதிப்பு!
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரச்சினை உட்பட பல விடயங்களை கண்டித்து தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக விடுத்த கோரிக்கைக்கு இணங்க மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றது.
ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு நகரம் உட்பட பல பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளன. வீதிகளில் ஓரளவான வாகன போக்குவரத்து இடம்பெற்று வருகிறது. பொதுச் சந்தைகள் முற்றாக மூடப்பட்டுள்ளது. அவதானிக்க முடிகிறது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன பெரும்பாலான பாடசாலைகள் இயங்குவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
செங்கலடி ஆரையம்பதி வாழைச்சேனை கொக்கட்டிச்சோலை போன்ற நகரங்களிலும் கடைகள் பெருமளவில் மூடப்பட்டுள்ளன. ஹர்த்தால் காரணமாக பெருமளவிலான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது. தெருக்களில் சனநடமாட்டம் மற்றும் மிகவும் குறைந்த நிலையிலேயே காணப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
கிளிநொச்சி மாவட்டமும் வெறிச்சோடியது!
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையில் 7 தமிழ் அரசியல் கட்சிகளால் கதவடைப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சியில் முழு அளவில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுச் சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. உணவகங்கள் மற்றும் அரச தனியார் வங்கிகள் வழமைப்போல் செயற்பட்டன. அதேவேளை உள்ளூர் குறுந்தூர பேருந்து சேவை மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினுடைய பேருந்துகளின் போக்குவரத்துகளும் நடைபெறுகின்றன.
முல்லைத்தீவில் ஹர்த்தால் - வழமைநிலை பாதிப்பு!
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா மீதான அச்சுறுத்தலின் மூலம் நீதித்துறை சுயாதீனமாக செயற்பட முடியாத நிலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளிற்கு கண்டனம் தெரிவித்தும் வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு முல்லைத்தீவில் முழுமையான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் நடமாட்டம் மிகக்குறைவாக காணப்பட்டது.
இதேவேளை அரச பேருந்து சேவைகள் வழமைபோல இடம்பெற்றிருந்ததுடன், தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது.
இதேவேளை பாடசாலைகளில் பரீட்சை இடம்பெற்று வருகின்றமையால் கல்விச்செயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றிருந்தது.
வங்கிகள், நிதி நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் இன்மையால் நகரத்தின் இயல்பான செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது.
இதேவேளை நீதிமன்ற செயற்பாடுகளில் இருந்து சட்டத்தரணிகள் பணிபகிஷ்கரிப்பு செய்திருந்தனர்.
மாவட்டத்தின் புறநகர்ப்பகுதிகளான முள்ளியவளை, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, விசுவமடு, மாங்குளம் உட்பட ஏனைய உபநகரங்களின் வழமையான செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருந்ததுடன், வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருந்தது.
மன்னாரை முடக்கிய ஹர்த்தால்! - முஸ்லிம்களும் ஆதரவு.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு வடக்கு கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை. தனியார் போக்குவரத்துச் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
அரச போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இடம் பெற்றதோடு பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. மேலும் அரச அலுவலகங்கள் மற்றும் வங்கிகளின் செயல்பாடுகள் வழமை போல் இடம்பெற்றது.
மன்னார் நீதிமன்ற செயல்பாடுகள் வழமை போல் இடம் பெற்ற போதும் சட்டத்தரணிகள் மன்றுக்கு செல்லாமல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சில உணவகங்கள், வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் ஹர்த்தாலுக்கு முஸ்லிம் மக்கள் மற்றும் வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.