பின்லாந்து முக்கியஸ்தர்களுடன் சிறப்பு சந்திப்புகளில் ஈடுபடும் கஜேந்திரகுமார்!
29 Sep,2023
பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்பு தூதுவர் தீனா ஜோர்டிக்காவிற்கும் (Tiina jortikka) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்குமிடையில் சிறப்பு சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பில், இலங்கை அரசினால் தமிழர் பிரதேசங்களில் நடாத்தப்படும், திட்டமிட்ட மனிதவுரிமை மீறல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக காத்திரமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
தமிழர் தாயகத்தில் நடைபெறும் மனிதவுரிமை சார்ந்த விடயங்களை, ஐரோப்பிய ஒன்றியமும் பின்லாந்தும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தமிழ் மக்கள் அமைதியான பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வதையே தாமும் விரும்புவதாகவும், ரீனா ஜோர்டிக்கா தெரிவித்தார்.
பின்லாந்து தேசத்தில் தற்போது தங்கிநிற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றும் நாளையும் வெளிநாட்டு அமைச்சு பிரதிநிதிகளுடனும், அரச, அரசசார்பற்ற அமைப்புகளின் பொறுப்பு வாய்ந்த மேலாளர்களுடனும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த சந்திப்புகளினூடாக தமிழர் தாயகத்தில் , இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளையும் மனிதவுரிமை மீறல்களையும் ஆதாரபூர்வமாக விளக்கவுள்ளார்.