தியாக தீபம் திலீபன் உயிர் நீத்த நாள் இன்று
26 Sep,2023
ஈழத்தமிழர்களின் சுதந்திர காற்றுக்காக தன்னை தியாகம் செய்த, மாமனிதர்களுள் முதன்மையான தியாகி திலீபனின் அறவழித் தடத்தின் இறுதி நாள் இன்று.
1980 ஆம் ஆண்டு கால கட்டங்களில் தலை தூக்கியிருந்த இனவெறித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக பல அமைப்புகள் ஆயுதம் தூக்க ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், அகிம்சை வழியிலும் தமிழர் தாயகத்திற்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடும் உண்ணா விரதம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தார் திலீபன்.
அதன்படி, 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி நல்லூர் ஆலய வளாகத்துக்கு முன்பாக அவர் தனது போராட்டத்தை ஆரம்பித்தார்.
ஈழத்தமிழ் மக்களின் விடிவிற்காய் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து அவர் இந்த போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.
இந்த தாயக விடுதலைக்கான அகிம்சை வழி போராட்டம் 12 நாட்கள் தொடர்ந்தாலும் அவரது கோரிக்கைகளுக்கான எந்தவொரு பதிலும் கிடைக்காத நிலையில், அவர் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி கவலைக்கிடமான நிலையில் உயிர் நீத்தார்.
அகிம்சை வழியில் தமிழர்களுக்காக தமது உயிரை தியாகம் செய்த திலீபன் தியாக தீபமாக உருவெடுத்தார்.
இதனை நினைவுகூரும் முகமாக திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள், அவரது நினைவுச்சிலை அமைந்துள்ள இடத்தில் கடந்த 15 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்ற நிலையில், இறுதி நாளான இன்றும் பல நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.