இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை தீர்த்துக்கொள்ள விரும்பாது அதனை நீளமாக்கிக் கொண்டு அதன் மீதேறி பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் இலங்கை அரசியலாளர்கள்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இப்போது மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளையும் தோற்றுவித்து பிரச்சினையோடு பயணிக்கும் துர்ப்பாக்கியம் நடந்து கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.
இராணுவ வீரர்களின் வழிபாட்டிடம்
மாங்குளம் - முல்லைத்தீவு பிரதான வீதியில் கரிப்பட்ட முறிப்பு அமைந்துள்ளது. இங்கு பிரதான வீதியையொட்டி இருந்தது சிறிலங்கா இராணுவத்தின் முகாம்.(இது இப்போது கைவிடப்பட்டுள்ளது.) இந்த முகாமினுள் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று நிறுவப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது.
அங்குள்ள இராணுவ வீரர்களின் மத வழிபாட்டுக்காக வீதியை பார்த்தவண்ணம் அமைக்கப்பட்டிருந்தது இரு வழிபாட்டுத்தலங்கள். ஒன்று புத்த பெருமானை வழிபடுவதற்கானது.மற்றையது இந்துக் கடவுள்களை வழிபடுவதற்கானது.
பௌத்த சிங்கள மக்களிடையே புத்தருடன் பஞ்சமூர்த்திகள் மற்றும் சரஸ்வதி,சக்தி,இலக்குமி,பிள்ளையாரை வணங்கும் பழக்கம் உடையவர்கள் என்பது இங்கே நினைவு கூறவேண்டும்.
இப்போது இந்த இராணுவ முகாம் கைவிடப்பட்டுள்ளது. முகாம் அகற்றப்பட்ட போது புத்தரின் சிலையும் அகற்றப்பட்டு அது வைக்கப்பட்ட தளம் அப்படியே கைவிடப்பட்டுள்ளது.
இரு வழிபாட்டிடங்கள் இருந்த போதும் புத்தரின் சிலை இருந்த பீடத்தில் சிவலிங்கத்தை வைத்துள்ளார்கள். ஆயினும் தொடர்ந்து வழிபடும் போக்கு இல்லை. அருகிலுள்ள இந்துக்கடவுளரின் வழிபாட்டிடம் அப்படியே இருப்பதையும் காணமுடிந்தது.
இராணுவ முகாம் அகற்றப்பட்ட பின்னர் இங்கு எந்த வழிபாடுகளும் இடம்பெறவில்லை. சிவலிக்கத்தை கொண்டுவந்து வைத்த பின்னரும் எந்த வழிபாடுகளும் நடைபெறுவதற்கான அடையாளங்களும் அங்கு இல்லை.
இது பற்றி இந்து சமய மத குருவிடம் உரையாடிய போது வழிபாடுகளற்று இருப்பது என்பது மனவருத்தம் தரக்கூடிய ஒரு விடயம் என குறிப்பிட்டிருந்தார்.
சிவலிங்கம் வைக்கப்பட்ட அந்த பீடத்தை சுத்தம் செய்து நிறப்பூச்சுக்களை மாற்றி சிவலிங்கத்தை வைத்திருக்கலாம்.அவ்வாறில்லாத இந்த செயற்பாட்டால் ஏற்பட்ட தோற்ற மாற்றம் மத முரண்பாடுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதோடு பௌத்த மதத்தை பற்றுறுதியோடு பின்பற்றும் மனிதரிடையே மனக்கசப்பு ஏற்படுத்தும்.
எந்த மதங்களும் மனிதரிடையே மன அமைதியை ஏற்படுத்தி அமைதியான வாழ்வு முறையை வாழவே வழிகாட்டுகின்றன என பொருள்படும் வகையில் மேலும் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் தமிழருக்கு ஏற்படவுள்ள சிக்கல் நிலைகள்
தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் நிலங்களில் தொல்பொருட்கள் என்று கூறி இப்படி கைவிடப்பட பௌத்த வழிபாட்டிடங்களைக் கொண்டு எதிர்காலத்தில் தமிழரின் நிலங்களை அபகரிக்கும் உள் நோக்கம் இராணுவத்தினருக்கு இருக்கலாம் என வரலாற்று தேடலுள்ள ஆசிரியர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.
படை முகாம் அகற்றப்படும் போது அந்த இடம் முன்பிருந்தது போல விட்டுச் செல்வதுதான் இராணுவ இயல்பு.புத்தரை வழிபட்ட இடங்களை அப்படியே விட்டுச் செல்வது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மேலும் கூறினார்.
கற்சிலைமடு. கரிவேலன்கண்டல், நெடுங்கேணி பாடசாலைக்கு முன்னிருந்த இராணுவ முகாம்களிலும் அந்த முகாம்கள் அகற்றப்படும் போது முகாம் வழிப்பாட்டுக்காக அமைக்கப்பட்ட புத்த வழிபாட்டிடங்களை அப்படியே விட்டுச் செல்கின்றனர். என்பது இங்கே நினைவில் கொள்ளவேண்டிய விடயமாகும்.
தமிழ் தேசியம் பற்றி பேசுவோர் இந்த விடயங்களில் கவனமெடுக்காது போகும் போது பல ஆண்டுகளின் பின்னர் இந்த இடங்களில் பௌத்த மத வழிபாடு இருந்துள்ளது.என்று உண்மைக்கு மாறான வாதிடல்களை சிங்கள கடும்போக்காளர்கள் முன்வைப்பார்கள் என்பது திண்ணம்.