கஜேந்திரன் எம்பியை தாக்கிய இனவெறி கும்பல்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
21 Sep,2023
திருகோணமலை, சர்தாபுர பகுதியில் வைத்து தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை தாங்கிவந்த நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்படும்.
திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் இன்று (21) குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே குறித்த ஆறு சந்தேக நபர்களுக்கும் எதிராக இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை - கொழும்பு ஏ6 பிரதான வீதியூடாக (17) அன்று மாலை திருகோணமலை நோக்கி பயணித்த தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தியானது சர்தாபுர பகுதியில் வைத்து தாக்கப்பட்டிருந்தது.
இதன்போது வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதுடன் வாகனத்தில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட 14 நபர்களும் தாக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பாக சீனக்குடா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த ஆறுபேரும் கைது செய்யப்பட்டு (18) அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது 21ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.