மன்னாரை வந்தடைந்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்திப் பவனி!
21 Sep,2023
தியாகி திலீபனின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்படும் நினைவூர்த்தி பவனி இன்று மன்னாரை சென்றடைந்துள்ளது.
''திலீபன் வழியில் வருகிறோம்' என்ற தொனிப்பொருளில் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய இந்த ஊர்திப் பவனியானது பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு, தமிழர் தாயகமான வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அந்த வகையில் திலீபனின் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தின் 7 ஆம் நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை இந்த நினைவூர்த்தி பவனி மாலை 5.50 மணி அளவில் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தை சென்றடைந்துள்ளது.
இதன்பின்னர் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தியாகி திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மக்களும் மலர்தூவி தியாகி திலீபனை நினைவுகூர்ந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பள்ளிமுனை, பனங்கட்டுக்கொட்டு, சாந்திபுரம், எழுத்தூர் மற்றும் தாழ்வுபாடு ஆகிய கிராமங்களை நோக்கி மக்களின் அஞ்சலிக்காக தியாகி திலீபனின் நினைவேந்தல் ஊர்திப் பவனி பயணித்தமை குறிப்பிடத்தக்கது.