கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி 8 ஆம் நாள் அகழ்வாய்வில் 5 மனித எலும்புக்கூட்டுத்
14 Sep,2023
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் எட்டாம் நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (14)இடம்பெற்றநிலையில், ஐந்து மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், தடையப் பொருளாக துப்பாக்கி ரவை ஒன்றும் ஆடைகளும் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட ஆடைகளில், நீளக்காட்சட்டையில் (இ1124) இலக்கம் இடப்பட்டுள்ளது.
இந்நிலையில் எட்டுநாட்கள் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 14மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்தவாரம் செப்ரெம்பர் (06) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிலையில் ஏழாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (14) நேற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.
அதேவேளை குறித்த அகழ்வாய்வுகளில் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான இரட்ணவேல், கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தாஞானராசா, தடையவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.
மேலும் இந்த அகழ்வாய்வு இடம்பெறும் இடத்திற்கு தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது