சனல் 4வை விடுதலைப் புலிகளுடையது என முத்திரை குத்துவார்கள்
11 Sep,2023
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் உண்மைத் தன்மை கண்டறியப்பட வேண்டும் என யாழில் பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் சனல் 4 ஊடகத்தை தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய தொலைக்காட்சி அல்லது வெள்ளைப் புலிகளுடைய தொலைக்காட்சி என்றெல்லாம் சொல்வார்கள், நாம் அதனை நம்பப்போவதில்லை எனவும் தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாரத்திற்கான மக்கள் குரல் நிகழ்ச்சியில், சனல் 4 ஊடகம் வெளியிட்ட ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான ஆவணப்படம் குறித்து யாழில் மக்களிடம் வினவிய போதே அவர்கள் இவ்வாறு தமது கருத்தை பதிவு செய்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், மௌலானா என்ற நபரொருவர் முன்னாள் ஜனாதிபதிகள் இருவரின் பெயரை குறிப்பிடுகிறார். எனவே இதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த வேண்டிய தேவை சர்வதேசத்திற்கு உண்டு.
ஒட்டுமொத்தமாக இவ்வாறான சம்பவம் இனியொரு தடவை இடம்பெறாமல் தடுக்க வேண்டுமாக இருந்தால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். கடந்த காலத்தில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை கொன்றொழித்தவர்கள் யார் என்பதை வெளிப்படையாக உலகத்திற்கே காட்டி ஐக்கிய நாடுகள் சபை வரை அந்த பிரச்சினையை கொண்டு சென்ற நிறுவனம் தான் சனல் 4 ஊடகம்.
அதற்கு இவர்கள் பல விதமான முத்திரைகளை குத்தக்கூடும். அது தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய தொலைக்காட்சி அல்லது வெள்ளைப் புலிகளுடைய தொலைக்காட்சி என்றெல்லாம் சொல்வார்கள். நாம் அதனை நம்பப்போவதில்லை. இதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என கோரியுள்ளனர்.