சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கான காரணங்கள் எவை ?
08 Sep,2023
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள தகுதி வாய்ந்த மருத்துவர்கள் குழு சார்பில் மருத்துவ வல்லுநரின் ஆலோசனையை நீதிமன்றுக்கு முன்வைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா இந்த கட்டளையை வழங்கினார்.
காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 8 வயது சிறுமி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட ஊசி மருந்தை ஏற்றும் “கானுலா” தவறாக பொருத்தப்பட்டதால், சிறுமியின் இடது கை பாதிப்புக்கு உள்ளான நிலையில் இடது கை மணிக்கட்டுடன் , அகற்றப்பட்டது என்று மருத்துவ அறிக்கை தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தின் போது தவறு இடம்பெற்றமை தொடர்பில் உரிய விசாரணைகள் சுகாதார அமைச்சின் பணிப்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தகுதிவாய்ந்த மருத்துவர்கள் குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணம் தலையக பொலிஸாரினால் நேற்று வியாழக்கிழமை (07) நீதிவான் நீதிமன்றில் “பி” அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையின் வாக்குமூலம் “பி” அறிக்கையில் விபரிக்கப்பட்டதுடன் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி திருமதி சர்மினி விக்னேஸ்வரன் நீண்ட சமர்ப்பணத்தை மன்றில் முன்வைத்தார்.
அதனை ஆராய்ந்த நீதிமன்று, சிறுமியின் கை அகற்றப்படுவதற்கான காரணம் மற்றும் அதற்கான தவறிழைப்பு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் மூவரடங்கிய தகுதிவாய்ந்த மருத்துவர்கள் குழுவைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர் ஒருவரினால் மன்றுக்கு நிபுணத்துவ ஆலோசனை வழங்குமாறு பணித்தது.
வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்ட தாதிய உத்தியோகத்தர் வெளிநாடு செல்வதற்கான தடைக் கட்டளை விண்ணப்பம் வழக்குத் தொடுநரான பொலிஸாரினால் முன்வைக்கப்பட்டது. அதற்கு அனுமதியளித்து நீதிமன்று கட்டளை வழங்கியது.
பொலிஸாரின் மேலதிக விசாரணை அறிக்கைக்காக வழக்கு செப்ரெம்பர் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.