திருகோணமலையிலுள்ள வெல்கம்வெஹர விகாரையின் விகாரதிபதி அம்பிட்டிய சீலவன்ச திஸ்ஸ தேரருக்கு, காணி ஒன்றுக்குள் பிரவேசிப்பதற்கு எதிராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தடை உத்தரவு பிறப்பித்தமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் தலையீடின்றி, தன்னிச்சியாக தடை உத்தரவை பிறப்பிக்க கிழக்கு ஆளுநருக்கு அதிகாரமில்லை என அத்துரலிய ரத்தன தேரர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் திருகோணமலை, பட்டினமும் சூழலும் பிரதேச சபை தொல்பொருள் ஆதாரம் கொண்ட நிலப்பரப்பாகும்.
இந்த நிலப்பரப்பில் 60 பேர்ச்சஸ் காணியில் மடமொன்றை அமைப்பதற்கான ஆவணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழர்கள் சிலர் அங்கு பதாதைகளை எந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளனா். இதுவரையில் அந்த பிரதேசத்தில் சாதாரண பொதுமக்களின் எதிர்ப்பு எதுவும் ஏற்பட்டது இல்லை.
எனவே, இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புதிதாக நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அம்பிட்டிய சீலவன்ச திஸ்ஸ தேரர் இந்த பூமிக்குள் பிரவேசிப்பதை தவிர்ப்பதற்கு தடை உத்தரவொன்றை பெற்றுக் கொடுக்குமாறு நகரசபை செயலாளரிடம் கோரியுள்ளாா்.
ஆளுநரின் கோரிக்கைகமைய அந்த நிலப்பரப்புக்குள் பிரவேசிக்க நகரசபை தடை விதித்துள்ளது. ஆனால், அவ்வாறு தன்னிச்சியாக தடை உத்தரவை பிறப்பிக்க ஆளுநருக்கோ, பிரதேச சபைக்கோ அதிகாரம் இல்லை.
இலங்கை அரசாங்கமே தலையிட்டிருக்க வேண்டும். சட்டபூர்வமாக வழங்கப்பட்ட காணியொன்றுக்கு பிரவேசிக்க தடைவிதிப்பது சட்டவிரோத செயற்பாடாகும்.
காணிகளை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு
இந்த மாகாணத்தில் இதுவரையில் தமிழ் மக்களாலோ அல்லது அங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளினாலோ இதுபோன்ற எதிர்ப்புக்கள் எழுந்தது இல்லை.
உயர்மட்ட சூழ்ச்சி செய்யக்கூடிய நபரொருவர் இந்த பிரச்சினையை திட்டமிட்ட வகையில் உருவாக்கியுள்ளாா். இந்த நிலையில், ஸ்ரீலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் நோக்கங்களுக்காக வனஜீவராசிகள் காணிகளையும் தொல்லியல் காணிகளையும் பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
நீதியான முறையில் காணிகளை பெற்றக் கொடுப்பதற்காக சகல தரப்பும் பிரதிநித்துவமாகும் வகையில் காணி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும்.
இனவாதத்தை சீர்தூக்கி மீண்டும் நாட்டில் போர் நிலையை உருவாக்கும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இது தமிழ், சிங்கள மக்களின் பொறுப்பாகும். குறுகிய நோக்கத்துக்காக செயற்பட்டால் வெளிநாட்டு அதிகார சக்திகளின் தேவைக்காக எமது நாடு இயங்குவதை தடுக்க முடியாது.
இனவாமின்றி நடுநிலையாக செயற்பட வேண்டும் என்பது எனது கோரிக்கை.” என தெரிவித்துள்ளார்.