முடிவில் சமரசம் இல்லை - ரணில் கோரிய பரிந்துரைகளை முன்னிறுத்தி கூட்டமைப்பு .
14 Aug,2023
தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள தீர்வானது, சமஷ்டி கட்டமைப்பின் அடிப்படையிலேயே சாத்தியம் என்ற நிலைப்பாட்டில் தாம் உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைப்பாட்டில் வேறு சமரசத்திற்கோ விட்டுக் கொடுப்பிற்கோ இடமில்லை என தெரிவித்துள்ள இரா.சம்பந்தன், அரசமைப்பில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் விரைவாக நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.
,
இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக இந்தியாவின் தலையீட்டுடன் கொண்டுவரப்பட்ட 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் நிலைப்பாட்டை அறியத் தருமாறு அதிபர் கோரியிருந்தார்.
அதற்கான காலக்கெடு நாளை 15 ஆம் திகதி செவ்வாய்கிழமையுடன் முடிவடையவுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன், தமது நிலைப்பாடு மற்றும் பரிந்துரைகள் அடங்கிய ஐந்து பக்கக் கடிதத்தை இன்று சிறிலங்கா அதிபரின் செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.
நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதுடன், தமிழ் மக்களின் அபிலாஷைகளின் உட்கிடைகளைப் புரிந்து கொண்டு, அவற்றுக்கு இணங்கவும் தொடர்ந்து வந்த அரசுகளால் தீர்வுக்காக வழங்கப்பட்ட பல்வேறு உறுதிமொழிகளுக்கு அமையவும் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கையை விரைந்து நிறைவுசெய்ய வேண்டும் என அதிபரை கோருவதாகவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
,
சுதந்திரம் பெற்ற காலம் முதல் - குறிப்பாக 1956 முதல் - தமிழர்கள் சமஷ்டி அடிப்படையான தீர்வே தங்கள் அபிலாஷை என்பதை அனைத்து தேர்தல்களிலும் மாறாமல் வலியுறுத்தி வந்திருக்கின்றார்கள் என அந்தக் கடிதத்தில் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடையில் அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையையும் கூட வலியுறுத்தினர் என்பதும் அந்த கடிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழரின் தேசிய இனப் பிரச்சினை மற்றும் அவர்களின் நியாயமான அபிலாஷைகள் தொடர்பில் கடந்து வந்த ஒவ்வொரு அரசுகளும் அளித்த வாக்குறுதிகள் மற்றும் முயற்சிகள் குறித்தும் இரா.சம்பந்தனின் கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
1983 முதல் இந்த விடயத்தில் இந்தியா வழங்கி வரும் பங்களிப்பு தொடர்பாகவும் இரா.சம்பந்தனின் கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.