தமிழர்களுடைய கைகளில் மீண்டும் ஆயுதங்களை திணிக்க முயற்சி! எதற்கும் தயார்
14 Aug,2023
தமிழர்களுடைய கைகளில் மீண்டும் ஆயுதங்களை திணிக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேர மற்றும் விமல் வீரவன்ச போன்றோர் நினைக்கின்றார்கள்.
அப்படி என்றால் அச்சந்தர்ப்பத்தை சந்திக்க தயாராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தான் வடக்கு, கிழக்கிற்கு செல்வதாகவும், அங்கே விகாரைகள் மற்றும் பிக்குகள் மீது கை வைக்க முயன்றால் அங்குள்ளவர்களின் தலைகளுடனேயே களனிக்கு திரும்புவதாகவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் எமது செய்திச்சேவை சிறீதரனை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
1985இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொடுத்த செவ்வியொன்றில் கூட “நாங்கள் ஆயுதங்களை விரும்பி தூக்கவில்லை. எங்களுடைய மக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் எங்கள் கைகளில் திணிக்கப்பட்டது” என்று கூறினார்.
ஆகவே மீண்டும் ஆயுதங்களை எங்களுடைய கைகளில் திணிக்க வேண்டுமென இவர்கள் நினைக்கின்றார்கள் என்றால் அப்படியொரு சந்தர்ப்பத்தை நாங்கள் சந்திக்க தயாராக இருக்கின்றோம்.
அவர்கள் தலையை கொய்தால் நாம் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று மேர்வின் சில்வா கருதுவது இந்த நவீன உலகத்திற்கு பொருந்துமா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும் என கடுமையாக சாடியுள்ளார்.
பௌத்த விகாரைகளை தமிழர்கள் பிடுங்கிக் கொள்ளப்போவதாகவும் அதை தான் காப்பாற்றப்போவதாகவும் சிங்கள மக்களுக்கு காட்டி பெரிய அரசியலொன்றை செய்யலாம் என மேர்வின் சில்வா கருதுவதாக சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.