செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் : உயிரிழந்த மாணவிகளுக்கு கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி!
14 Aug,2023
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது விமானப்படையினர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் 53 பாடசாலை மாணவிகள் மற்றும் 4 பணியாளர்கள் உயிரிழந்தனர்.
அவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வருடந்தோறும் பல இடங்களில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று திங்கட்கிழமை (14) செஞ்சோலை படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர்கள் வசிக்கும் பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது.
,
செஞ்சோலையில் மாணவிகள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து முல்லைத்தீவு – வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் இன்று (14) நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையிலான இந்த நினைவேந்தலின்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கத்தோடு, உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்பகுதியில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.