-
வடக்கு கிழக்கில் 13 ஐயும் கடந்து ஒரு அரசியல் தீர்வு நடைமுறையாகும் எனும் கலக்கம் சிங்களவர் மனதில் உருவாகிவிட்டது.
சிங்களவர்களுக்கு இலங்கை ஒரு தனிச் சிங்கள பௌத்த நாடு எனும் மனோபாவம் நூற்றாண்டு காலமாக இருந்தாலும் 80 களில் இருந்து 2009 வரை அதில் நம்பிக்கை இழந்தது.
வடக்கு கிழக்கு மாகாணத்தின் சிங்கள எல்லைகளைப் பாதுகாத்தால் போதும் என்ற கையறு நிலையில் இருந்தார்கள்.
ஏனெனில் ஆயுத பலத்தினால் தமிழர்கள் மேலோங்கி இருந்தார்கள் என்பதைத்தவிர வேறு எக்காரணமும் இல்லை.
2009 பின்னரான ஐந்து வருடத்தில் முழு நாடும் நமதே எனும் மமதை இருந்ததால் இராணுவ பிடியில் இருந்த நிலங்கள் போக பாரதூரமாக பௌத்த அடையாளத்தை நிறுவுவதில் அதிதீவிரம் காட்டவில்லை.
ஏனெனில் நாடு தமது கட்டுப்பாட்டில் இருப்பதால், எப்போது என்ன வேண்டுமானாலும், எதுவும் செய்துகொள்ளலாம் என்ற அதீத நம்பிக்கை அவர்களுக்கு.
..
ஆனால் கடந்த 5 வருடத்தில் வடக்கு கிழக்கில் என்றுமில்லாதவாறு பௌத்த அடையாளத்தை நிறுவுதல், பௌத்த விகாரைகளுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை வழங்கல், தனித் தமிழ்ப் பிரதேசத்திலும் விகாரைகளை அமைத்தல், வரலாற்றில் சிங்களவர்கள் வாழாத பகுதிகளில் அடாத்தாக சிங்களவர்களைக் குடியமர்த்தல் என்பன கடந்து, கேவலம் அரச மரம் இருக்கும் ஒவ்வொரு இடத்தையும் பௌத்த சமயத்திற்கான அடையாளம் என தொல்லியல் கூறாகவும் ஆவணப்படுத்த விளைவதன் நோக்கம் என்பது ஒரு மேலாதிக்க சிந்தனை என்பதை விட ஒரு பயத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது, அது என்னவாக இருக்கும்?
1. வடக்கு கிழக்கு ஒரு நிலத்தொடர்பு அற்ற மாகாணம் என நிறுவுதற்கு சான்றுகளை உருவாக்குதல்.
2. இம்மாகாணங்களில் தமிழர்கள் தொடர்ச்சியாக வாழ்ந்தார்கள் எனும் அடையாளத்தை அழித்தல்.
3. தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகள் அனைத்தும் சிங்களவர்கள் வாழ்ந்த பகுதி தான் என நிறுவுதல்.
4. வடக்கு கிழக்கில் சைவத்தமிழர்கள் பூர்வீக குடிகள் இல்லை என்பதை நிறுவுதல்.
இது ஒன்றும் புதிய நிகழ்ச்சி நிரல் அல்ல, 1956 காலத்தில் இருந்து வந்தது தான். ஆனால் 40 ஆண்டுகள் தடுக்கப்பட்டிருந்தது. தள்ளிப்போடப்பட்டிருந்தது.
இன்னொரு பக்கம் நோக்கின், அரசின் இந்த அவசரத்திற்கு காரணம், வடக்கு கிழக்கில் 13 ஐயும் கடந்து ஒரு அரசியல் தீர்வு நடைமுறையாகும் பயத்தில் இந்த விதைப்பாகவும் இருக்கலாம்.
ஆனால் ஏதோ பீதி அவர்களை ஆட்கொண்டுவிட்டது.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் நம்பிக்கை இன்னும் அற்றுப்போகவில்லை.