(நேர்கண்டவர் – R அன்டனி)
சகல அரசியல் கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச்சு நடத்துவது ஒரு நல்ல விடயமென்று நினைக்கிறேன். ஆனால் அது நேர்மையானதாக இருக்கவேண்டும். நிறைய சமூகங்கள் அங்கே காயப்பட்டிருக்கின்றன. எனவே அரசாங்கம் அதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆலோசனை மற்றும் சகலதையும் உள்ளடக்கிய வகையில் செயல்பட வேண்டும். தற்போதைய அரசாங்கம் அதைச் செய்யத் தயாராக இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என்று இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஸ்டீபன் போல் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடி, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் செயற்பாடுகள், கடன் மறுசீரமைப்பு விவகாரம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் ஸ்டீபன் அவுஸ்திரேலியாவின் நிலைப்பாட்டை இதன்போது தெளிவுபடுத்தினார். மேலும் அரசியல் தீர்வு விவகாரம், புலம்பெயர் மக்கள், தமிழ் கட்சிகள் நகர்வுகள், கிரிக்கட் , இலங்கையில் அவரது ஒரு வருடம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் பல விடயங்களை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இந்த செவ்வியில் வெளிப்படுத்தினார்.
செவ்வியின் முக்கிய விபரங்கள் வருமாறு
நாணய நிதியத்துடன் இலங்கை செய்துகொண்ட நீடிக்கப்பட்ட 2.9 பில்லியன் உடன்படிக்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
சர்வதேச நாணய நிதிய பொதியானது இலங்கைக்கு ஒரு மிக முக்கியமான படியாக அமைந்துள்ளது. இது இலங்கைக்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்க உதவியது. அது நிச்சயமாக தேவைப்பட்டது. இலங்கை பற்றி சர்வதேச சந்தைகளில் நம்பிக்கையேற்பட்டுள்ளது. இது உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவிக்கான வழியை ஏற்படுத்துகிறது. தற்போது கடன் மறுசீரமைப்பு செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது. இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீண்டும் நல்ல பாதையில் கொண்டு செல்வது மிகவும் முக்கியமானது. மேலும் நாணய நிதிய செயற்பாட்டில் பொருளாதார மறுசீரமைப்பு, அரச நிறுவன மறுசீரமைப்பு, பொருளாதாரத்தின் கட்டுப்பாடு நீக்கம், வருமான நிலை போன்ற பல கூறுகள் உள்ளன. எனவே, சர்வதேச நாணய நிதிய திட்டமானது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் மற்றும் இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான மிக முக்கியமான படியாகும்.
மறுசீரமைப்புக்களை எப்படி பார்க்கின்றீர்கள்? கடந்தவாரம் நீங்கள் இலங்கைக்கு ஆலோசனைகளையும் வழங்கினீர்கள்?
நீங்கள் சொல்வது சரி. நான் சில ஆலோசனைகளை வழங்கினேன். சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அரசாங்கம் சந்திக்க வேண்டிய சில வரையறைகளை வெளிப்படையாகக் கொண்டுள்ளது. அந்த அளவுகோல்களைப் பூர்த்திசெய்ய இலங்கை மிகவும் கடினமாக உழைக்கிறது. மறுசீரமைப்பு பணி மிகப்பெரியது. ஒருசில மாதங்களில் செய்யக்கூடியதல்ல. நான்கு மாதங்களில் நீங்கள் இலங்கையின் பொருளாதாரத்தை முழுமையாக சீர்திருத்தப்போவதில்லை. அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. வளர்ச்சிப் பாதைக்கு செல்வதற்கு, இலங்கை பொருளாதாரத்தை பன்முகப்படுத்தவும் ஏற்றுமதி தளத்தை பன்முகப்படுத்தவும் வேண்டும், அதைசெய்ய உங்களுக்கு வெளிநாட்டு முதலீடு தேவை. அதனால் வெளிநாட்டு முதலீட்டு சூழலை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற முயற்சிக்கும் வகையில் அரசாங்கம் சில நல்ல விடயங்களைச் செய்கிறதென்று நினைக்கிறேன். ஆனால் அது ஒரே இரவில் நடக்கக்கூடிய ஒன்றல்ல.
நெருக்கடி நேரத்தில் இந்தியா 3.8 பில்லியன் டொலர் வழங்கியது. ஆனால் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் அப்படி உதவவில்லை என்ற கருத்து உள்ளது. ஏன் அப்போது நேரடி கடன்களை நீங்கள் வழங்கவில்லை?
இதற்கு பல பதில்கள் உள்ளன. இலங்கை அனுபவித்த நெருக்கடிக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் மிகவும் விரைவாகவும் வலுவாகவும் பதிலளித்தது. இது மானியம். மாறாக இது கடன் அல்ல. அந்த உதவி நான்கு மடங்காக அதிகரித்தது. சுகாதார சேவைகளை மேம்படுத்துதல், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல், பெண்கள் மற்றும் சிறுமிகள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் தேவைகளை இலக்காகக் கொண்டது. என்னுடன் பேசிய அரசாங்க அதிகாரிகள் அல்லது சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆஸ்திரேலியா வழங்கிய இந்த ஆதரவை பாராட்டினர். நெருக்கடிக்கு நேரடியாக அமெரிக்காவும் இலங்கைக்கு மிக முக்கியமான ஆதரவை வழங்கியது.
ஆனால் இந்தியாவின் நிலை வேறு. இந்தியா இலங்கையின் மிக நெருங்கிய அண்டைநாடு. இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு இந்தியாவுக்குப் பொறுப்பு உள்ளது. உதாரணமாக எங்கள் சொந்த பிராந்தியத்தில் உள்ள பசிபிக் தீவு நாடுகளுக்கு ஆஸ்திரேலியா ஒரு பொறுப்பைக் கொண்டிருக்கின்றது. நிச்சயமாக இந்தியா பாரிய உதவியை செய்தது. இந்தியாவின் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் இலங்கையின் நிலை மிகவும் கடினமாக இருந்திருக்கும்.
அவுஸ்திரேலிய நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய முயற்சிக்கின்றனவா?
ஏற்கனவே இலங்கையில் பல அவுஸ்திரேலிய நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்துள்ளன. மேலும் சில நிறுவனங்கள் சக்திவளம் சில துறைகளில் இங்கு முதலீடு செய்வதில் ஆர்வமாகவுள்ளன. அந்த முதலீடுகள் இன்னும் இலங்கையில் அனுமதிக்கும் செயல்முறையின் ஊடாக ஆரம்பிக்கக்கூடிய கட்டத்துக்கு செல்லவில்லை. ஆனால் கணிசமான ஆர்வம் உள்ளது. அவற்றில் குறைந்தபட்சம் ஒன்றையாவது பெற முடிந்தால் நன்றாக இருக்கும்.
இலங்கையின் முதலீட்டுச் சூழலில் சில இடையூறுகள் மற்றும் தடைகள் இருப்பதாக அண்மையில் நீங்கள் பேசியிருந்தீர்கள். அவை என்ன?
திட்டங்களுக்கான ஒப்புதலை பெறுவதற்கான ஒற்றைப் பாதையைத் தீர்மானிப்பதில் தடைகள் உள்ளன. உண்மையில் இலங்கை அரசாங்கம் முதலீட்டாளர் வசதி மையம் எனப்படும் ஒரு ஒற்றை சாளர முறையை திறக்க உத்தேசித்துள்ளது என்று கூறியுள்ளது. அவர்கள் ஏற்கனவே அதனுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளனர். இது ஒரு நல்ல படியாகும். தற்போது எந்த நிறுவனம் ஊடாக செல்ல வேண்டும் என்பதை அறிவது கடினம். ஒரு அனுமதியைப் பெற்றால், தெரியாத மற்றொரு தேவை தோன்றும். எனவே முறையை நெறிப்படுத்துதல் முக்கியம். தற்போது புதிய முதலீட்டுச் சட்டத்தை அரசாங்கம் செய்ய விரும்புவதாகக் குறிப்பிடுவது சிறப்பானது. இவை அனைத்தும் சிறந்த சூழலை உருவாக்கும்.
இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறையின் தற்போதைய நிலைமை குறித்து உங்கள் மதிப்பீடு என்ன?
செல்லுபடியான, விரிவான பொறுப்புக்கூறல், நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்க அணுகுமுறையை தீவிரமாக மேற்கொள்ள பல ஆண்டுகளாக இலங்கையை நாங்கள் ஊக்குவிக்கிறோம். ஆனால், நல்லிணக்கம் என்பது இயல்பாகவே கடினமான செயல் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். அதை மேற்கொண்ட நாடுகள் உள்ளன. 30 ஆண்டுகாலப் போர் ஒரு கடினமான பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளது. அந்த மரபினூடாக இலங்கை இன்னமும் செயற்பட்டு வருகின்றது. மற்ற நாடுகளின் அனுபவங்களும் படிப்பினைகளும் உள்ளன. தென்னாபிரிக்கா தனது சொந்த அனுபவத்தை முன்மாதிரியாக அல்லது வழிகாட்டியாக இலங்கைக்கு வழங்கியுள்ளது. ஆனால் ஒவ்வொரு நாடும் வித்தியாசமானது. தென்னாபிரிக்காவில் முன்னெடுத்தது இங்கு சாத்தியமற்றுப்போகலாம். எனவே அது இலங்கைக்குச் சொந்தமான செயலாக இருக்க வேண்டும். இலங்கையில் உள்ள பல்வேறு பங்குதாரர்கள் அதில் இடம்பெறவேண்டும். இது இலங்கையின் உந்துதல் செயல்முறையாக இருக்க வேண்டும். அதை வெளியில் இருந்து திணிக்க முடியாது. தென்னாப்பிரிக்கா போன்ற பிற உதாரணங்களிலிருந்து மற்றவர்களிடமிருந்து சில பாடங்களை எடுக்கலாம். ஆனால் அது இலங்கைக்குள் பிறந்து இலங்கையர்களுக்குச் சொந்தமான ஒன்றாக இருக்க வேண்டும்.
இந்த செயற்பாட்டுக்கு அவுஸ்திரேலியா உதவுமா?
இந்த கட்டத்தில் அது எவ்வாறான வடிவமாக இருக்கும் என்று எமக்குத் தெரியாது. ஆஸ்திரேலியாவின் சாத்தியமான உதவியானது, எதிர்காலத்தில் நீங்கள் எப்படி நிலைநிறுத்துகிறீர்கள் என்பதைப் பற்றியதாக இருக்கும்.
ஆனால் ஜெனிவா தீர்மானங்களை ஆதரித்தீர்கள்?
ஜெனீவா மூலமாகவோ, ஜெனீவா தீர்மானங்கள் மூலமாகவோ அல்லது எங்களுடைய சொந்த இருதரப்பு ஈடுபாட்டின் மூலமாகவோ அந்த செயல்முறைகளை மேற்கொள்வதற்கு நாங்கள் எப்போதும் இலங்கையை ஊக்குவித்துள்ளோம்.
வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்கள் இலங்கையில் முதலீடு செய்யவேண்டுமென ஜனாதிபதி அழைப்பு விடுக்கிறார். அவுஸ்திரேலிய புலம்பெயர் தமிழ் மக்களுக்கான உங்கள் செய்தி என்ன?
அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்கள் தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் மற்றும் பர்கர்களை உள்ளடக்கியவர்கள். இலங்கை புலம்பெயர்ந்தோர் ஆஸ்திரேலிய சமூகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்கள் தமது படிப்பினைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்களா இல்லையா என்பதை புலம்பெயர் இலங்கையர்களே தீர்மானிக்க வேண்டும்.அவர்களில் பலர் வெளிப்படையாக இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுகிறார்கள். அவர்களில் பலர் இலங்கை சமூகம் முன்னோக்கி செல்வதற்கு ஆதரவளிப்பதாக நான் நம்புகிறேன்.
இலங்கையில் அரசியல் அதிகாரப் பகிர்வு தீர்வை தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றனர். இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?
நாங்கள் இலங்கையின் நண்பன் என்ற வகையில், இலங்கை ஒரு வலுவான, நிலையான, ஒன்றிணைந்த, உள்ளடக்கிய சமூகமாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமென்று விரும்புகிறோம். எந்தவொரு தீர்வாக இருந்தாலும் அது உள்வீட்டு தயாரிப்பாக இருக்க வேண்டும். அது இலங்கையர்களுக்குச் சொந்தமானதாக இருப்பது அவசியம். அது வெளியில் இருந்து திணிக்கப்பட்டால் நிறைவேறாது.
ஜனாதிபதி தற்போது தீர்வு விடயம் குறித்து சகல கட்சிகளுடனும் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளார். அது பற்றி?
சகல அரசியல் கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச்சு நடத்துவது ஒரு நல்ல விடயமென்று நினைக்கிறேன். ஆனால் அது நேர்மையானதாக இருக்கவேண்டும். நிறைய சமூகங்கள் அங்கே காயப்பட்டிருக்கின்றன. எனவே அரசாங்கம் அதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆலோசனை மற்றும் சகலதையும் உள்ளடக்கிய வகையில் செயல்பட வேண்டும். தற்போதைய அரசாங்கம் அதைச் செய்யத் தயாராக இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
நீங்கள் அடிக்கடி தமிழ் தலைவர்களை சந்திக்கின்றீர்கள். அவர்கள் என்ன கூறுகின்றனர்? அவர்களின் கரிசனை என்னவாக இருக்கின்றது?
நீங்கள் அதைக் என்னிடம் கேட்பதை விட அவர்களிடம் கேட்பது நல்லது. உண்மையைச் சொல்வதென்றால், பல கட்சிகள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் வேறுபட்ட பார்வையை கொண்டுள்ளன. அது பணிகளை மேலும் கடினமாக்குகிறது என்று நினைக்கிறேன். இது செயல்முறையை கடினமாக்குகிறது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் வெவ்வேறு கட்சிகளுக்கும் வெவ்வேறு சமூக உறுப்பினர்களுக்கும் வெவ்வேறு குறிக்கோள்கள் மற்றும் இலட்சியங்கள் உள்ளன. அவை செயற்பாடுகளை மேலும் கடினமாக்குகின்றன.
வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவுஸ்ரேலியா என்ன செய்கிறது?
ஆம். சில திட்டங்களை நாங்கள் செய்கிறோம். எங்களிடம் இருதரப்பு மேம்பாட்டுத் திட்டம் உள்ளது. சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கவனம் செலுத்துகிறோம். மேலும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஆதரவு, வாழ்வாதாரங்கள் என்பனவற்றை செய்கிறோம். மேலும் போரால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் அல்லது காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் சட்டபூர்வ பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஆதரவளித்துள்ளோம். வட, கிழக்கில் அந்தச் சமூகங்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் திட்டங்களை நாங்கள் கொண்டுள்ளோம். ஆனால் ஒரு நாட்டில் குறிப்பிட்ட மாகாணத்திலோ அல்லது நாட்டின் எந்தவொரு குறிப்பிட்ட பகுதியிலோ கவனம் செலுத்தாமல் ஒட்டுமொத்த ரீதியில் எமது திட்டங்கள் இருப்பதை உறுதி செய்வதில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம்.
காணாமல் போனோரின் உறவினர்களை சந்தித்துள்ளீர்கள். அவர்கள் என்ன கூறுகின்றனர்?
காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்கள் சிலரை நான் சந்தித்தேன். அவர்களின் கதைகளைக் கேட்பது மிகவும் கடினம். அவர்கள் 14 ஆண்டுகளுக்கு முந்தைய அனுபவத்தை மிகவும் கடினமாக இன்னும் உணர்கிறார்கள். எனவே அவர்கள் சொல்வதைக் கேட்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. அவர்கள் தங்கள் கதைகளைச் சொல்லும் வாய்ப்பைப் விரும்புகிறார்கள். நாம் அந்த கதைகளை மறக்க மாட்டோம்.
மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் தற்போது பேசப்படுகின்றது. அது குறித்து?
அரசியலமைப்புக்கு அமைவாக இலங்கை தேர்தல்களை நடத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அரசியலமைப்பின் கீழ் அந்த பொறுப்புகளை நிலைநிறுத்த அரசாங்கத்தை நாங்கள் ஊக்குவிக்கிறோம். நாங்கள் வெளிப்படையாக ஜனநாயகத்தை ஆதரிக்கிறோம். ஜனநாயக மரபுகளை ஆதரிக்கிறோம். வாக்குப் பெட்டியில் மக்கள் தங்கள் கருத்தைக் கூறுவதற்கான உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம். மேலும், அரசியலமைப்பில் தேர்தல்களுக்கு ஒரு காலக்கெடு உள்ளது. அது பின்பற்றப்பட வேண்டும்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையிலிருந்து படகுகளில் வரவேண்டாம் என்று கூறுகின்றீர்கள். தற்போது அந்த நிலைமை எவ்வாறு உள்ளது?
இலங்கையில் பொருளாதார நெருக்கடியானது பெரும்பாலான மக்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புவதைப் போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்கிறோம். மேலும் இலங்கை கடற்படை, மற்றும் கடலோர காவல்படை மற்றும் விமானப்படையுடன் பல ஆண்டுகளாக இணைந்து செயற்படுகிறோம். அவர்களுக்கு பயிற்சி மற்றும் திறன், மூலம் ஆதரவை வழங்குகிறோம். ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமின்றி வேறொரு நாட்டுக்கான சட்டவிரோத கடல் பயண முயற்சியை பரிசீலிக்கும் அபாயத்தை பரிசீலிக்க அதிகமான மக்கள் தயாராக இருப்பதை நாங்கள் காண்கிறோம்.
எனவே இலங்கையுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். ஆனால் படகுகள் பாதுகாப்பாக இல்லாததால் கடலில் உயிரிழக்கும் ஆபத்து உள்ளது என்பது எங்களுக்கு கவலையளிக்கிறது. பாதுகாப்பற்ற கப்பலில் நீண்ட தூரம் பயணிக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
அவ்வாறான மக்களுக்கு எனது செய்தி என்னவென்றால் இதனை செய்யக்கூடாது என்பதாகும். அது பாதுகாப்பற்றது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை இழக்க நேரிடும். இதில் நிச்சயமாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கான வாய்ப்பு பூஜ்ஜியமாகவே உள்ளது. இதில் யாரும் வெற்றிகரமாகச் செல்ல முடியவில்லை. இந்த சட்டவிரோத முயற்சிகளில் வரும் எவரும் கண்டுபிடிக்கப்பட்டு, இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை கணிசமான பணத்தை இழந்திருக்கிறார்கள்.
நீங்கள் இலங்கையில் ஒரு வருடமாக வாழ்கின்றீர்கள். இலங்கை மக்கள் மற்றும் உணவுகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
இலங்கையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மிக மோசமான நெருக்கடியின் பின்னரே நான் வந்தேன். இலங்கை ஒரு சுவாரஸ்யமான நாடு. உங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு மற்றும் நிறைய சவால்களும் உள்ளன. ஆனால் உங்களுக்கு ஒரு அழகான நாடு உள்ளது. மேலும் பார்க்க பல அற்புதமான இடங்கள் உள்ளன. கடற்கரைகள், மலையகம், வடக்கு பகுதி போன்றவற்றை குறிப்பிடலாம். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரையான பயணத்தை குறிப்பிடலாம். மேலே செல்ல செல்ல நாடு மாறுவதை நீங்கள் பார்க்கும் விதம் கவர்ச்சிகரமானது. மக்கள் மிகவும் நட்பு மற்றும் விருந்தோம்பல் உள்ளவர்கள். அவர்கள் ஆஸ்திரேலியர்களை விரும்புகிறார்கள். அது நல்லது.
உங்களுக்கு பிடித்த இடம் எது? கடற்கரை?
எனக்கு ஹிக்கடுவை மிகவும் பிடிக்கும். நான் இன்னும் கிழக்கு நோக்கிச் செல்லவில்லை. கிழக்குக்கு செல்ல வேண்டும்.
இலங்கையில் பிடித்த உணவு?
எனக்கு கத்தரிக்காய் பிடிக்கும்.
இலங்கைக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் யார்?
இலங்கையில் எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்? நான் வார இறுதியில் டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவை சந்தித்து கலந்துரையாடினேன். அவர் ஒரு சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பதை நான் அறிவேன். மேலும் நான் குறுகிய வடிவத்தை விட டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறேன். எனவே அவர் எனக்கு பிடித்த வீரர் என்று கூறுவேன்.
கிரிக்கெட் மாறி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் என்று தற்போது 20/20க்கு வந்துவிட்டது. 20-20 தாம் எதிர்காலத்தில் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
இல்லையேன நம்புகிறேன். சரி, நான் கொஞ்சம் பாரம்பரியவாதி. எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் தான் பிடிக்கும். பாகிஸ்தான் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கையுடன் விளையாடுகிறது. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இது நல்லது. நான் இன்னும் டெஸ்ட் போட்டி வடிவத்தை விரும்புகிறேன். எதிர்காலத்தில் வலுவான டெஸ்ட் விளையாடும் நாடுகள் இருக்கும். டெஸ்ட் போட்டி அதன் இடத்தை தக்கவைக்கும் என்று நான் நம்புகிறேன்.
இறுதியாக இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்க என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இலங்கையில் தமிழ் மக்களின் நிலைப்பாடு அவுஸ்திரேலியாவில் நன்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றே கூறுவேன். இலங்கை ஒரு வலுவான, பாதுகாப்பான, வளமான மற்றும் வெற்றிகரமான சமூகமாக உருவாக வேண்டும் என்பதனை ஆஸி விரும்புகிறது. மக்கள் வடக்கில், கிழக்கில், தெற்கில், மத்தியில் என , எங்கிருந்தாலும் சரி, சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் தேவைகளையும் கவனித்துக்கொள்வதையே அது குறிக்கிறது. தமிழ் சமூகம் உட்பட இலங்கையில் உள்ள அனைவருக்கும் அவுஸ்திரேலியாவில் நிறைய ஆதரவு இருக்கின்றது.