.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மாபெரும் கவனயீப்பு பேரணி இடம்பெறவுள்ளதுடன், வடக்கு கிழக்கில் ஹர்த்தாலும் முன்னெடுக்கப்படுகிறது.
இன்று வெள்ளிக்கிழமை (28) காலை 9 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் மக்கள் இறுதி யுத்தத்தில் உறவுகளை இராணுவத்திடம் கையளித்து பேருந்துகளில் ஏற்றப்பட்ட பகுதியில் ஆரம்பிக்கும் கவனயீப்பு பேரணியானது முல்லைத்தீவு நீதிமன்றுக்கு முன்பாகச் சென்று மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக மாவட்ட செயலகத்தை வந்தடைந்து அங்கு மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் பல்வேறு தரப்பிலுருந்தும் முழுமையான ஆதரவு கிடைக்கப்பெற்று வருகிறது.
முல்லைத்தீவு
தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பூரண கடையடைப்பு | Mullaitivu People Protest Sl
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு ,மல்லாவி, உடையார்கட்டு, மாங்குளம், ஒட்டுசுட்டான், முள்ளியவளை உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் நகரங்களில் கடைகளை மூடி போராட்டத்துக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கிவருகின்றனர்.
அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் போராட்டம் மற்றும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பூரண ஆதரவு வழங்குவதோடு இன்று போக்குவரத்து சேவைகள் எவையும் இடம்பெறவில்லை என்பதோடு, பாடசாலைகள் பலவும் மாணவர்கள் வரவின்மை காரணமாக இயங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் பல்வேறு தரப்பிலுருந்தும் முழுமையான ஆதரவு கிடைக்கப்பெற்று வருகிறது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், அரசியல் கட்சிகள், தனியார் போக்குவரத்து சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வெளியிட்டிருந்தனர்.
மன்னார்
தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பூரண கடையடைப்பு | Mullaitivu People Protest Sl
இந்த நிலையில் இன்றைய தினம் மன்னார் மக்களும் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவை வழங்கியிருந்தனர் அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த அணைத்து தனியார் சேவைகளும் இன்றையதினம் இயங்கவில்லை என்பதுடன் பெரும்பாலான வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
அதே நேரம் பாடசாலைகளுக்கும் மாணவர்களின் வருகை மிக குறைவாக காணப்பட்டதுடன் வீதிகளிலும் மக்களின் நடமாட்டத்தை பெரும்பாலும் அவதானிக்க முடியவில்லை அத்துடன் தனியார் போக்குவரத்து சேவை முற்றாக முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரி
தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பூரண கடையடைப்பு | Mullaitivu People Protest Sl
இந்நிலையில் தென்மராட்சியின் முக்கிய நகரமான சாவகச்சேரி நகரத்தில் உள்ள உணவகங்கள் தவிர்ந்த மருந்தகங்கள் உட்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு பொதுச்சந்தையும் முற்றாக மூடப்பட்டுள்ளது.
இதே நேரம் அரச தனியார் வங்கிகளும் பிரதான வாயில்களை மூடி வாடிக்கையாளர் சேவைகளை வழங்குவதை முற்றாக தவிர்த்துள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட தனியார் பேருந்துகள் போக்குவரத்தில் ஈடுபடாமையினால் அரச உத்தியோகத்தர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
இதேவேளை பாடசாலைகளிலும் மாணவர்கள் வரவின்றி வெறிச்சோடிப்போய் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா
தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பூரண கடையடைப்பு | Mullaitivu People Protest Sl
வவுனியாவில் உணவகங்கள் மருந்தகங்கள் தவிர்ந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன் மரக்கறி மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை சந்தையும் மூடப்பட்டிருந்தது.
இதேவேளை பாடசாலைகளுக்கு குறைந்த அளவிலான மாணவர்களே வருகை தந்திருந்ததுடன் தூர சேவை பேருந்துகள் மற்றும் சில உள்ளூர் பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டிருந்தது.
வவுனியா வர்த்தகர் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், மிற்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் உட்பட பொது அமைப்புக்கள் பகிரங்கமாக ஹர்த்தாலுக்கு அழைப்பு விடாத நிலையில் வர்த்தகர் சங்கத்தின் தலைவர், செயலாளர் தமது வர்த்தக நிலையத்தை மூடியிருந்தமையினால் ஏனைய வர்த்தகர்களும் தமது வர்த்தக நிலையங்களை மூடியிருந்தமையும் குறிப்படத்தக்கது.