“நாற்பது வருடங்களுக்கு முன்பு, 1983 ஆம் ஆண்டு ஜூலையில், இலங்கையெங்கும் தமிழர்களுக்கு எதிராகக் கொடூரமான படுகொலைகள் புரியப்பட்டன. இவற்றில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து, பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்தார்கள், இடம்பெயர்க்கப்பட்டார்கள், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
கறுப்பு ஜூலையின் கொடுமை, பதட்டத்தை அதிகரித்து, சில தசாப்தங்கள் நீடித்த, ஆயிரக்கணக்கானோர் மரணமாகிய ஆயுத மோதலாக மாறியதுடன், இதன் மனப்பாதிப்பைச் சமூகங்கள் தற்போதும் அனுபவிக்கின்றன.
“சோகமான இந்த நாளில், நாம் தமிழ்க் கனேடியர்களுடனும், உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகங்களுடனும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை நினைவேந்தி, தப்பிப் பிழைத்தோரை கௌரவிப்பதுடன், வெறுப்புக்கும், வன்முறைக்கும் எதிராக எப்போதும் குரல் கொடுப்பதற்கு உறுதியுடனிருப்பதை மீள உறுதிப்படுத்துகிறோம். மே 18 ஐ, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாகப் பிரகடனம் செய்யும் பிரேரணையைக் கனேடிய நாடாளுமன்றம் கடந்த ஆண்டு ஒருமனதாக அங்கீகரித்து, இவ்வாண்டில் இந்த நாள் முதன் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும், அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்படவேண்டுமென நாம் இன்றும் தொடர்ந்து கோருகிறோம். கனடா, மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டாது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில், மிகவும் நலிவடைந்த சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் தொடர்ந்து உதவுவோம்.
“கனடாவின் மிகப் பெரும் பலங்களில் ஒன்றாகப் பன்முகத்தன்மை எப்போதுமே விளங்கும். கறுப்பு ஜூலையின் பின், பலர் அவர்களது நாட்டில் இருந்து வெளியேறப் பலவந்தப்படுத்தப்பட்டபோது, 1983 ஆம் ஆண்டில் கனேடிய அரசு சிறப்பு ஏற்பாடுகள் செயற்திட்டம் ஒன்றை உருவாக்கி, 1,800 தமிழர்கள் வாழ்க்கையைப் புதிதாகக் கட்டியெழுப்புவதற்கெனக் கனடா வந்து, உலகில் உள்ள மிகப் பெரும் புலம்பெயர் தமிழ்ச் சமூகங்களில் ஒன்றை உருவாக்கினார்கள்.
பிரதம மந்திரியாகக் கடந்த ஆண்டுகளிலும், நேற்றும், பல தமிழ்க் கனேடியர்களைச் சந்தித்து கறுப்பு ஜூலையின் துயர அனுபவங்களைக் கேட்டறிந்து, மரணமானோரை அவர்களுடன் இணைந்து நினைவுகூர்ந்து, எமது நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய முக்கிய பங்களிப்புகளுக்கும், தொடர்ந்து ஆற்றிவரும் பங்களிப்புகளுக்கும் நன்றி தெரிவிக்கவும் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.
“கறுப்பு ஜூலையிலும், அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறையிலும், துன்பத்தை எதிர்கொண்டவர்களுக்கும், அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும் கனேடிய அரசின் சார்பாக நான் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன், வெறுப்பு அற்ற எதிர்காலம் ஒன்றைக் கட்டியெழுப்புவதில் உறுதியுடனிருப்பதை மீள உறுதிப்படுத்துகிறேன்.”