வெள்ளை வானில் குழந்தைகளை கடத்தி கண், சிறுநீரகம் திருட்டு - இலங்கைத் தமிழர் பரப்பு பேட்டி
15 Jul,2023
தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சமீப காலமாக வெள்ளை வானில் குழந்தைகள் கண், சிறுநீரகத்திற்காக கடத்தப்படுவதால் குழந்தைகளை பாதுகாத்துக்கொள்வதற்காக புகலிடம் தேடி தமிழகம் சென்றதாக இன்று காலை தனுஸ்கோடி சென்ற இலங்கைத் தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து 257 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
இந்நிலையில், இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண்கள், குழந்தைகள் என இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் யாழ்ப்பாணம் கடற்கரையில் இருந்து புகலிடம் தேடி அகதிகளாக நேற்று இரவு சுமார் 8 மணியளவில் பைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனை இறங்கினர்.
தகவலறிந்த இராமேஸ்வரம் மரைன் காவல் துறையினர் இலங்கைத் தமிழர்களை மீட்டு இராமேஸ்வரம்; மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் “இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்ததாக சொல்லப்படுகிறது, ஆனால் இன்னும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்தபாடில்லை.
இலங்கையில் வாழ வழி இல்லாமல் தான் இந்திய மக்களை நம்பி கடலில் உயிரை பணயம் வைத்து பிளாஸ்டிக் படகில் தமிழகம் வந்துள்ளோம்.
தமிழர்கள் வசிக்கு பகுதியில் சமீப காலமாக வெள்ளை வானில் குழந்தைகள் கண், கிட்டினிக்காக கடத்தப்படுவதால் குழந்தைகளை பாதுகாத்து கொள்வதற்காக புகலிடம் தேடி தமிழகம் வந்துள்ளோம்” என இலங்கை தமிழரான விஜயகுமார் என்பவர் தெரிவித்தார்.
இதனையடுத்து பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பவுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது