ஈழசினிமா எனும் போர்வையில் ஒளிந்துள்ள சதி அரசியலை முறியடிப்போம் - விடுதலைப்புலிகள் அறிக்கை
09 Jul,2023
ஈழசினிமா எனும் போர்வையில் ஒளிந்துள்ள சதி அரசியலை முறியடிப்போம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
அண்மைக்காலங்களில் தமிழீழ தேசிய விடுதலை பரப்பில் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் "வெந்து தணிந்தது காடு" எனும் திரைப்படம் தொடர்பான தெளிவுபடுத்தலினை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இவ்வறிக்கை வெளிவந்துள்ளது. 08.07.2023 அன்று வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில்,
"விழிப்புதான் விடுதலைக்கான முதற்படி" என்பதே தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கரு. இன்றும் உரிமைக்காக போராடிவரும் எம்மினம் மிகப்பெரும் இனப்படுகொலையை எதிர்கொண்டு அதற்கான நீதிகோரி தன்னெழுச்சிபெற்று போராடிக்கொண்டிருக்கும் இந்த வரலாற்றுச் சூழமைவில், தன்னை ஒரு படைப்பாளியாக அடையாளப்படுத்தும் ஒவ்வொருவரும் எமது இனம்,மொழி மற்றும் தேசவிடுதலை சார்ந்து பொறுப்புணர்வுடனும் கடமையுணர்வுடனும் அறத்துடனும் எவ்வாறு படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற தெளிவுடனும் ,வரலாற்றுப் புரிதலுடனும் தங்கள் கலைப்படைப்புகளை வெளிக்கொணரவேண்டும்.
அரசபயங்கரவாத சதி நிகழ்ச்சி நிரல்களுக்கு யாரும் அங்கீகாரத்தையோ அல்லது ஆதரவையோ அளித்து தமிழீழ விடுதலைச் செயற்பாடுகளை பலவீனப்படுத்தும் வரலாற்று தவறுகளுக்கு ஆளாகவேண்டாம் என்பதனை வலியுறுத்துகிறோம்.
"வெந்து தணிந்தது காடு" போன்ற திரைப்படங்கள் எமக்கான நீதியை மறுக்கும் ஒரு வடிவமாகவும், தமிழரின் வீரம் செறிந்த விடுதலைப்போராட்டத்தின் நியாயப்பாட்டை திசைதிருப்பும் ஒரு கருவியாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்திற்கு பின்னால் உள்ள சதி அரசியலைப் புரிந்துகொண்டு இதனை முற்றுமுழுதாக புறக்கணிக்கவேண்டும். இதனை அங்கீகரிப்பதால் எமது தேசம் விடுதலை பெறவேண்டுமென்பதற்காய் வீரச்சாவடைந்த மாவீரரின் தியாகத்திற்கும் , அர்ப்பணிப்புகளுக்கும், தமிழீழ இலட்சியத்திற்கும் மற்றும் எம்மக்கள் முன்னெடுத்துவரும் விடுதலைச் செயற்பாடுகளுக்கும் ஏற்படும் பாதிப்பை எம் மக்கள் அனைவருக்கும் தெளிவூட்டவே இந்த கண்டனத்தை வெளியிடுகிறோம்.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை சிருஷ்டிகர்த்தாக்கள் சித்தரித்துக் காட்டவேண்டும். என இவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.