புத்தளம் - வென்னப்புவ பகுதியில் வாழும் 25 வயதான இளைஞரே சுபுன். ருமேனியாவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நிறுவனம் ஒன்றின் ஊடாக அவர் விண்ணப்பித்துள்ளார்.
''இங்கிருந்து பயனில்லை. வெளிநாடு சென்று எவ்வளவானாலும் உழைக்க வேண்டும். இல்லையென்றால் முன்னேற முடியாது," என சுபுன் தெரிவிக்கின்றார்.
இத்தாலி செல்லும் நோக்கத்திற்காகவே, அவர் ருமேனியா செல்லும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்.
நீர்கொழும்பு முதல் சிலாபம் வரையான கரையோர பிரதேசம் மற்றும் அதை அண்மித்த பகுதிகளில் வாழ்வோரில் அதிகளவானோர் இத்தாலியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
சட்டரீதியாவோ அல்லது சட்டத்திற்குப் புறம்பான முறையிலோ இத்தாலி செல்லும் நோக்குடன் இன்றும் பலர் இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தப் பிரதேசத்தில் வாழும் அனைத்து குடும்பங்களிலும் குறைந்தபட்சம் ஒருவரோ அல்லது மொத்த குடும்பமுமோ இத்தாலிக்கு சென்று வாழ்கின்றனர். அத்தோடு, அப்படிச் சென்றவர்களில் சிலர், அங்கு குடியுரிமையையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அதிகமானோர் அங்கு வாழ்கின்றமையால், நீர்கொழும்பு, வென்னப்புவு மற்றும் மாரவில உள்ளிட்ட சில பிரதேசங்கள் ''சிறிய இத்தாலி" அல்லது ''சிறிய ரோம்" எனப் பல வருடங்களாக அழைக்கப்பட்டு வருகின்றன.
படகின் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலிக்கு பலர் சென்ற போதிலும், அதன் ஆபத்தை உணர்ந்துள்ளமையால் தற்போது அந்தப் பயணத்தைக் கைவிட்டுள்ளனர்.
இத்தாலி நாட்டு குடியுரிமையைப் பெற்ற ஒருவரை திருமணம் செய்தல், வேறொருவரின் விசாவை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் வேறு முறையில் ஆட்கடத்தல் வர்த்தகத்தின் ஊடாக இத்தாலிக்கு செல்வது தற்போது காணப்பட்டாலும், அது அதிக செலவைக் கொண்ட ஒரு முறையாக உள்ளது.
மேல் குறிப்பிட்ட முறைகளில் இத்தாலிக்கு செல்வதற்காக 30 முதல் 40 லட்சம் ரூபா வரை செலவிட வேண்டியுள்ளமையை, நாம் நடத்திய ஆய்வின் ஊடாக உறுதி செய்துகொள்ள முடிந்தது.
ருமேனியாவிலிருந்து இத்தாலிக்கு
''இத்தாலி செல்வதற்காக இதற்கு முன்னரும் விசாவிற்கு விண்ணப்பித்தேன். அது சரி வரவில்லை. வேறு முறைகளில் செல்ல முயன்றேன். ஆனால், அதிக செலவாகின்றது. ருமேனியா சென்று, அங்கிருந்து செல்வது இலகுவானது, லாபகரமானது," என சுபுன் தெரிவிக்கின்றார்.
''எனது நண்பர் ஒருவர் ஓராண்டுக்கு முன்பாக ருமேனியா சென்று அங்கிருந்து இத்தாலிக்கு தப்பிச் சென்றார். நானும் ருமேனியா சென்று, சிறிது காலத்திற்குப் பிறகு இத்தாலி நோக்கி செல்வேன். ருமேனியாவில் வாழ்ந்தும் பயனில்லை.
இத்தாலி சென்றால், எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்க முடியும். எமது பிரதேசத்தில் ஒருவர் அமெரிக்காவில் இருந்தால்கூட பயனில்லை. இத்தாலியில் வாழ்வதைப் போல வராது"
''எனது நண்பர், உறவினர்கள் மாத்திரமல்ல, அயலவர்கள் உள்ளிட்ட பலரும் இத்தாலியில் வாழ்கின்றனர். அதனால், எனக்குத் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்வது சிரமமாகாது. இத்தாலி மொழியும் என்னால் சிறிதளவு கதைக்க முடியும்"
சுபுன் மனதில் இத்தாலி செல்லும் எதிர்பார்ப்பே வியாபித்திருப்பது அவரது பேச்சிலிருந்து தெரிய வருகின்றது.
இலங்கை, அகதிகள், இந்தியா, இத்தாலி
கன்டைனரில் இத்தாலி பயணம்
''நான் ருமேனியாவில் 10 மாதங்கள் வரை இருந்தேன், பின்னர் இத்தாலி நோக்கி பயணித்தேன். அதற்காக நான் 4500 யூரோவை (சுமார் 14 லட்சம் ரூபா) செலவிட்டேன்," என சில மாதங்களுக்கு முன்னர் ருமேனியாவிலிருந்து இத்தாலி நோக்கிச் சென்ற சஹன், எம்மிடம் தெரிவித்தார்.
செல்லுபடியாகும் விசா இன்றி இத்தாலியில் வாழ்ந்து வரும் அவர், இலங்கையருக்கு சொந்தமான வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றி வருகின்றார்.
''நான் ருமேனியாவிலிருந்து கன்டேனர் ஒன்றிலேயே இத்தாலிக்கு வருகை தந்தேன். என்னுடன் மேலும் 35 முதல் 40 பேர் வரை வருகை தந்தார்கள். இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம் ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அதில் இருந்தார்கள். இத்தாலிக்கு வருகை தருவதற்கு 28 மணித்தியாலம் வரை சென்றது," என இத்தாலிக்கு வருகை தந்த விதத்தை அவர் தெளிவூட்டினார்.
''ருமேனியாவிலுள்ள சிறிய கிராமம் ஒன்றுக்கு வருகை தருமாறு கூறி, அங்கிருந்தே எம்மை ஏற்றினார்கள். தண்ணீர், உணவு ஆகியவற்றை எடுத்துக்கொண்டே நாம் வருகை தந்தோம். என்னுடன் வந்த எவருக்கும் எந்தவொரு பிரச்னையும் ஏற்படவில்லை. ஒளிந்து செல்லும் வகையிலும், பலர் இருந்து செல்லும் விதத்திலும், மூச்சு எடுக்கக்கூடிய விதத்திலும் கன்டேனர் தயாரிக்கப்பட்டிருந்தது," என்று அவர் விவரித்தார்.
தனது ஆசை காரணமாகவே இத்தாலிக்கு வருகை தந்ததாகக் கூறிய சஹன், விசா இல்லாமையால் குறைந்த சம்பளத்திற்கே வேலை செய்ய வேண்டியுள்ளதாகவும் கவலை வெளியிட்டார்.
''அனைவரும் இத்தாலிக்கு வருகை தந்ததன் பின்னர், அகதிக்காக விசாவிற்கு விண்ணப்பிப்பார்கள். நான் இத்தாலிக்கு வந்து 8 மாதங்கள் ஆகின்றன. ஆனால், விசா எடுப்பதற்கான எந்தவொரு வேலையையும் செய்யவில்லை. விசா இல்லாமல் தொழிலை தேடிக்கொள்வது கடினமானது.
ஆவணங்கள் இல்லாமையால், குறைந்த சம்பளத்திற்கே வேலை செய்ய வேண்டியுள்ளது. இங்கு ஆவணங்கள் இல்லாமல் வேலை தரமாட்டார்கள். ஏனென்றால், அவ்வாறு வேலை கொடுத்து, சிக்குண்டால், தொழில் வழங்கியோருக்கும் பிரச்னை ஏற்படும்"
ஆவணங்கள் இல்லாமல் இத்தாலியில் இருப்பதை விடவும், ருமேனியாவில் இருந்திருந்தால் நல்லது எனத் தற்போது நினைக்கின்றேன். எந்தவொரு தொழிலையும் செய்வதற்கான அறிவு மற்றும் திறமை இருந்தாலும், இத்தாலிக்கு வந்ததன் பின்னர் இங்கு கூறும் வேலையைத்தான் செய்ய வேண்டும்.
சுத்திகரிப்பு, ஹோட்டல்களில் தட்டுகளைக் கழுவுதல் போன்ற வேலைகளையே செய்ய வேண்டியுள்ளது. அதுவும் நிரந்தரமில்லை. குறுகிய காலத்திற்கே வேலை இருக்கும். குளிர் காலத்தில் வேலை வாய்ப்புகளைத் தேடுவது கடினம்," என சஹன் இத்தாலியில் வாழ்வது குறித்து எம்முடன் கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
ஐரோப்பிய சங்கத்திலுள்ள நாடாகக் காணப்படும் இத்தாலியில், விசா காலம் முடிவடைந்ததன் பின்னர் அங்கு தங்கியிருந்து கைது செய்யப்படும் பட்சத்தில், தண்டப்பணம் அறவிடுதல், உடனடியாக நாடு கடத்தல் மற்றும் குறுகிய காலத்திற்கு இத்தாலிக்குள் வருவதற்குத் தடை விதித்தல் போன்ற தண்டனைகள் விதிக்கப்படும்.
விசா தகவல்கள் அந்த நாட்டு குடிவரவு குடியகல்வு தரவு கட்டமைப்பில் காணப்படுகின்றமையால், அந்த வளையத்திற்குள் பிரவேசிப்போரின் விசா காலாவதியாகும் தேதி அதில் தென்படும்.
பயணத்திற்கு 3000 முதல் 4500 யூரோ வரை செலவிட நேரிடும்
ருமேனியாவிலிருந்து இத்தாலி நோக்கி சட்டவிரோதமான முறையில் ஆட்கடத்தலில் ஈடுபடும் முகவர் ஒருவரை தொடர்புகொள்வதற்கு பிபிசிக்கு இயலுமை கிடைத்தது.
பாரிய பிரயத்தனங்களுக்குப் பிறகு, அவரைத் தொடர்புகொள்ள முடிந்தது. பெயரை வெளியிடக்கூடாது என்று உறுதியளித்த பிறகு, ருமேனியாவிலிருந்து இத்தாலி நோக்கிய பயணம் குறித்து அவர் தெளிவூட்டினார்.
''பல பேக்கேஜ்கள் உள்ளன. 3000 முதல் 4500 யூரோ வரை செலவிட வேண்டும். கன்டேனர், கார், டிரக் போன்ற முறைகளில் அழைத்துச் செல்வோம். செர்பியா, ஹங்கேரி ஊடாகச் செல்லும் பல முறைகள் காணப்படுகின்றன. எந்த முறையில் சென்றாலும், ஒழிந்தே செல்ல வேண்டும்," என அவர் கூறினார்.
இலங்கை, அகதிகள், இந்தியா, இத்தாலி
''கார் மூலம் அழைத்துச் செல்லும் முறையில் செல்வோரையே நான் கொண்டு சேர்ப்பேன். ருமேனியா ஒருவரும், இத்தாலி ஒருவரும் வேலை செய்கின்றார்கள். 4000 முதல் 4500 யூரோ வரை செலவிட வேண்டும். இத்தாலி சென்றுவிட்டதன் பின்னரே நாம் பணத்தை அளவிடுவோம்"
இந்த அபாயகரமான பயணம் குறித்து, ஆட்கடத்தல் முகவர் மேலும் தெளிவூட்டினார்.
''காரின் பின்புற டிக்கியிலேயே மறைந்து செல்லவேண்டும். அது இலங்கையிலுள்ள வாகனங்களைப் போன்றல்ல. வசதிகள் காணப்படும். மக்கள் செல்லும் விதத்தில் இந்த காரின் டிக்கி தயாரிக்கப்பட்டுள்ளது. முச்சு எடுக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஹங்கேரியை நெருங்கியவுடன், டிக்கியிலிருந்து வெளியில் எடுத்து, பின்னர் இத்தாலியை நெருங்கியவுடன் மீண்டும் மறைந்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும்."
''இவ்வாறு இத்தாலி எல்லையைத் தாண்டும்போது, சோதனை செய்து சிக்குண்டால், முகாமிற்கு அனுப்புவார்கள். முகாமிலிருந்து ஓரிரு தினங்களில் அவர்களை நாம் வெளியில் எடுப்போம். அதற்கு அவரின் முயற்சியும் இருக்க வேண்டும்."
''ருமேனியாவில் சிக்குண்டால், பிரச்னை இல்லை. முகாமிலிருந்து ஓரிரு தினங்களில் வெளியில் அனுப்புவார்கள். சிறிது காலத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுவார்கள். எனினும், வெளியேறினார்களா இல்லையா என்பது தொடர்பில் யாரும் தேட மாட்டார்கள்.
இத்தாலி செல்ல முயன்று, 5 அல்லது 6 தடவைகள் சிக்குண்ட இந்திய பிரஜை ஒருவர் இருக்கின்றார். அவர் இன்னும் இங்குதான் வாழ்கின்றார். எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது இத்தாலி சென்றுவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவர் இருக்கின்றார்," என்று தன் பல வருட அனுபவத்தை அவர் எம்முடன் பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறும் விதத்தில், ருமேனியாவிலிருந்து இத்தாலி நோக்கிச் செல்ல 12 மணித்தியாலங்கள் வரை செல்லும் என்பதுடன், ஹங்கேரியில் காணப்படும் வாகன நெரிசலில் சிக்குண்டால், அந்த நேரம் மேலும் ஒரு மணித்தியாலம் வரை அதிகரிக்கும்.
இலங்கை, அகதிகள், இந்தியா, இத்தாலி
''சில தினங்களுக்கு முன்னரும், நாம் இலங்கையைச் சேர்ந்த சிலரை இத்தாலிக்கு அழைத்துச் சென்றோம். நாளாந்தம் செல்ல மாட்டோம். செல்லக்கூடிய நாட்கள் இருக்கின்றன. அன்று மாத்திரமே செல்வோம். அழைத்துச் செல்லும் எந்தவொரு நபருடனும் நாம் தொடர்புகளைப் பேண மாட்டோம்.
இத்தாலிக்கு அழைத்துச் சென்று அவர்களை அங்கு விட்ட பிறகு பணத்தைப் பெற்றுக்கொள்வோம். அதனுடன் எமது வேலை முடிந்தது. இப்போது வேலை செய்வதில்லை. தற்போது சோதனைகள் அதிகரித்துள்ளன. சில மாதங்களுக்கு வேலை செய்ய முடியாது. பணம் கொடுத்தாலும், நினைத்தவாறு செல்ல முடியாது. சரியான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும்."
இத்தாலி செல்லும் நோக்கிலேயே, இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த பலர் ருமேனியா நோக்கி வருகின்றார்கள்.
''ஆண், பெண் என்ற பேதம் கிடையாது. இரு தரப்பினரும் இத்தாலி செல்வதற்கு வருருவார்கள்."
தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ருமேனியா மற்றும் இத்தாலி நோக்கிச் சென்ற இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியது.
எனினும், எத்தனை இலங்கையர்கள் இத்தாலியில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ளார்கள், அதிகாரிகளிடம் சிக்குண்டார்களா, எத்தனை பேர் நாடு கடத்தப்பட்டுள்ளார்கள் உள்ளிட்ட தரவுகள் தம்வசம் கிடையாது என்று பணியகம் கூறுகின்றது.
ருமேனியாவிலிருந்து இத்தாலி நோக்கி சட்டவிரோதமான முறையில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு உயிரிழந்தவர்கள் அல்லது வேறு ஆபத்துகளை எதிர்நோக்கியவர்கள், பாதுகாப்பு படையினரிடம் சிக்குண்டவர்கள் அல்லது வேறு பிரச்னைகளை எதிர்நோக்கியர்கள் தொடர்பான தகவல்களை, ஆட்கடத்தல் முகவரிடம் நாம் கோரிய போதிலும், அவர் அவ்வாறான தகவல்களை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்தார்.