உலக பாரம்பரிய அம்சங்களை பட்டியலிடும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி ,அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது மகாவம்சத்துக்கு உலக பாரம்பரிய அங்கீகாரத்தை வழங்கி சர்வதேச ஆவணமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டு யுனஸ்கோவினால் வெளியிடப்பட்ட 64 உலக நினைவக சர்வதேச ஆவணங்கள் பட்டியலில் மகாவம்சமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை உலக பாரம்பரிய பட்டியலில் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களாக யுனஸ்கோ அமைப்பினால் பொலன்னறுவை , சீகிரியா, அனுராதபுரம் தம்புள்ள தங்க விகாரை, காலி பழைய நகரம், கண்டி நகரம், சிங்கராஜா வனவளம் , இலங்கையின் மத்திய மலை நாட்டு பிரதேசம் என எட்டு இடங்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.
அந்த வகையில் பாரம்பரிய ஆவணங்கள் பட்டியலில் மகாவம்சம் இடம்பிடித்துள்ளது. இதற்கு இந்தியா பல வழிகளிலும் உதவியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. ஏனென்றால் பெளத்தம் தோன்றிய இடம் இந்தியாவாகும்.
ஆகவே மகாவம்சம் பாரம்பரிய வரலாற்று ஆவணமாக தெரிவு செய்யப்படுவதற்கு இந்தியாவின் உதவியும் தேவைப்பட்டிருக்கின்றது.
பௌத்த நெறியை உருவாக்கிய கௌதம புத்தர் பிறந்தது இந்தியாவில் என்றால் அதை ஏன் இந்தியா விட்டுக்கொடுக்க வேண்டும்? ஆகவே இந்த விடயத்தில் இந்தியாவின் வகிபாகம் எந்தளவுக்கு உள்ளது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
இதை அங்கீகரிப்பதற்கு முன்பதாக யுனஸ்கோ அமைப்பும் இந்தியாவின் உதவியை நாடியிருக்கலாம்.
ஆனால் யுனஸ்கோ கூறுவது போன்று இந்தியாவிலும் இலங்கையிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் மகாவம்சத்தின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுவதில் தான் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அப்படியான ஆய்வுகள் எப்போது, யாரால், எங்கு நடத்தப்பட்டன என்பது குறித்த தகவல்கள் யுனஸ்கோவின் உத்தியோகபூர்வ பக்கத்தில் இல்லை.
யுனஸ்கோவானது எவ்வாறு மகாவம்சத்தை பாரம்பரிய ஆவண பட்டியலில் சேர்த்தது என்பது பற்றி பார்க்க வேண்டும்.
2023 ஆம் ஆண்டுக்கான பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்ட 64 ஆவணங்களுடன் இது வரை மொத்தமாக 494 ஆவணங்கள் மரபுரிமை அந்தஸ்த்தைப் பெற்றுள்ளன.
இதில் இலங்கையிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட மகாவம்சம் பற்றிய தனது பக்கத்தில் யுனஸ்கோ கூறியிருக்கும் விளக்கம் முக்கியமானது.
‘உலகின் மிக நீளமான உடைக்கப்படாத தொடர் ஆவணமாக உள்ள மகாவம்சமானது தெற்காசியாவில், முதலாவது பாரம்பரிய வரலாற்றை கூறும் ஆவணமாக உள்ளது . இலங்கையின் வரலாற்றை மகாவம்சமானது கி.மு 6ஆம் நூற்றாண்டிலிருந்து முன்வைக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவிலும் இலங்கையிலும் நடத்தப்பட்ட தொல் பொருள் ஆய்வுகளின் மூலம் இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்களின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கௌதம புத்தர், பேரரசர் அசோகரின் வாழ்நாட்கள் மற்றும் உலக மதமாக பௌத்தத்தின் எழுச்சி போன்ற முக்கியமான தகவல்களைக் கொண்ட தெற்காசியாவின் முக்கியமான வரலாற்று ஆவணமாக மகாவம்சம் உள்ளதாக யுனஸ்கோ தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பௌத்தரை சிங்களவராக சித்திரித்து வரும் பேரினவாதிகளை இந்த செய்தி மகிழ்ச்சிப்படுத்தக் கூடும்.
ஆனால் மகாவம்சம் என்பது பாளி மொழியில் எழுதப்பட்ட ஒரு ஆவணம் என்ற விடயம் பெரும்பாலான சிங்களவர்களுக்கே தெரியாதுள்ளது.
கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரர் என்பவரால் பாளி மொழியில் எழுதப்பட்ட இந்த மகாவம்சமானது இதற்கு முன்னர் தொகுக்கப்பட்ட தீபவம்சம் என்ற நூலை அடிப்படையாகக்கொண்டே எழுதப்பட்டிருக்கின்றது என்பது ஆய்வாளர்களின் கருத்து.
இதை பௌத்த வரலாற்று நூலாக வரலாற்றாசிரியர்கள் ஏன் ஏற்றுக்கொள்வதில்லை என்றால், இதை எழுதிய மகாநாம தேரர் ஒரு பௌத்த பிக்குவே ஒழிய அவர் ஒரு வரலாற்று ஆய்வாளர் இல்லை என்பதாகும்.
எனவே பௌத்த மதத்தை அடிப்படையாகக்கொண்டு குறித்த மதத்தை ஆதரிக்கும் வகையிலேயே மகாவம்சம் எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
விஜயன் வருகையை மகாவம்சம் கூறுகின்றது. எனினும் இலங்கையில் பௌத்தர்களுக்கு முன்பு இயக்கர்களும் நாகர்களும் வாழ்ந்தனர் என்ற குறிப்புகள் அதை எந்தளவுக்கு சாத்தியமாக்குகின்றன என்ற கேள்விக்கு இது வரை இலங்கை பௌத்த சிங்கள வரலாற்றாசிரியர்களிடமிருந்து பதில் இல்லை.
விஜயன் என ஒரு மன்னன் இல்லை அவர் இந்தியாவிலிருந்தும் வரவில்லை என ஒரு தடவை ஞானசார தேரர் கூறியிருந்தமையும் முக்கிய விடயம்.
இந்தியாவிலிருந்து வந்தால் அவர் நிச்சயம் ஒரு தமிழ் மன்னனாகத்தான் இருப்பார் என்ற சிங்கள மக்கள் மனதில் உள்ள சந்தேகங்களே அதற்குக் காரணம்.
ஆனாலும் மகாவம்சத்தில் அந்த சம்பவங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஞானசார தேரர் போன்றோருக்கு இப்படியான குறிப்புகளே தர்மசங்கடத்தை ஏற்படுத்துகின்றன.
விஜயன் என்ற மன்னன் இந்தியாவிலிருந்து வருகை தந்து இங்கு குவேனி என்ற பெண்ணை மணந்தான். அவன் மூலமாகவே இலங்கையில் சிங்கள பரம்பரை தோன்றியது என்ற கருத்தை பொதுவாக பௌத்த பிக்குகளும் கடும்போக்கு சிங்களவர்களும் ஏற்றுக்கொள்வதில்லை.
எது எப்படியானாலும் இலங்கை வரலாற்றை ஓரளவுக்குக் கூறும் மகாவம்சம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இந்தியா ஏதாவதொரு வழியில் உதவி செய்துள்ளது எனலாம். பெளத்தம் இந்தியாவில் தோற்றம் பெற்றது என்ற வரலாற்று அடையாளத்தை தக்க வைத்துக்கொள்வதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.