சிங்களமயமாக்கப்பட்ட கிழக்குப் பல்கலைகழகம் - அடுத்த குறி யாழ் பல்கலைக்கழகம்
03 Jul,2023
சிறிலங்காவை பொறுத்தவரை ஈழத்தமிழர்களான நாம் எதையுமே போராடித்தான் பெறவேண்டும் என்பது தவிர்க்கமுடியாத ஒரு விடயமாகும்.
அந்த அடிப்படையிலாக ஈழத்தமிழர்கள் தமது உரிமைகளுக்காக போராடி வந்த காலப்பகுதியில் அந்த போராட்ட சூழலில் மிக காத்திரமான பங்களிப்பினை வழங்கி வந்த யாழ்ப்பாண பல்கலைகழக சமூகம் இன்றளவும் அந்த பணியை மேற்கொண்டு கொண்டே இருக்கிறது.
இருப்பினும் சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரல் இதனை சிதைக்கவேண்டும் அல்லது மாணவர் சமூகத்தின் போராட்ட மனோநிலையை மாற்றவேண்டும் என்ற நோக்கில் தமது காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது.
காய் நகர்த்தல்கள்
அந்த அடிப்படையில் இலங்கையில் தமிழர்களுக்கென்று இருக்கக்கூடிய தமிழர் நலன்சார்ந்த நடவடிக்கைகளில் கடந்த தமிழர் வரலாற்றை நினைவேந்தும் நிலைப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் யாழ் பல்கலைகழகத்தில் கல்வி நடவடிக்கைகளுக்காக அதிகளவு சிங்கள மாணவர்களை உள்ளீர்த்தல் மற்றும் ஈழத்தமிழர்களின் நினைவேந்தல் மாதங்களில் களியாட்ட நிகழ்வுகளுக்கான ஒழுங்களை ஏற்படுத்தல் என காய்கள் நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
குறிப்பாக கிழக்குப்பல்கலைகழகத்தின் 6 பீடங்களில் 1 பீடம் மாத்திரமே தமிழர் தரப்பிடம் எஞ்சியுள்ளது எனவும் இதுபோலவே யாழ்ப்பாணப்பல்கலைகழகத்தின் நிலைமையினை மாற்றுவதற்கான நகர்வுகளை அரச தரப்பு மேற்கொள்ளுவதாகவும் ஐ.பி.சி தமிழ் வானொலியின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அழகராசா விஜயகுமார் குறிப்பிட்டிருந்தார்.
அதுமாத்திரமில்லாமல் தமிழர்களது கனதியான கடந்த கால வரலாறு எமது இளஞ்சந்ததியினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளில் அனைத்து தமிழர் தரப்புகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்