இங்கு குறிப்பிடப்படும் தகவல்கள் 2009 மார்ச் 31 முதல் ஏப்ரல் 4 வரை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆனந்தபுரம் பகுதியில் அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையில் நிகழ்ந்த சமர் பற்றிய நிகழ்வுகளாகும்.
இந்த மோதலின் போது பல தளபதிகள் உட்பட 625 உறுப்பினர்களை விடுதலைப் புலிகள் இழந்தனர்.
இது நடந்து ஆறு வாரங்களின் பின்னர் முள்ளிவாய்க்காலில் புலிகளை இராணுவம் முற்றுமுழுதாகத் தோற்கடித்தது. அதில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கொல்லப்பட்டார்.
புலிகள் அரச படைகளுடன் போரிட்டு வடக்கு கிழக்கின் பல பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன், தமது தனியான நிர்வாக நடவடிக்கைகளையும் அப்பகுதிகளில் மேற்கொண்டிருந்தனர். ஆனால் 2007 இல் இருந்து அவர்கள் இராணுவத்திடம் தோல்வியடையத் தொடங்கினர்.
2008 இல் கிளிநொச்சியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து புலிகள் பரந்தனிலும் தோல்வி கண்டனர். 2009 இல் ஆனையிறவிலும் தோல்வியடைந்தனர்.
ஏ 9 வீதியின் (யாழ்ப்பாணம் – கண்டி வீதி) மேற்குப் பகுதி முழுவதையும் புலிகள் இழந்த பின்னரும் கூட, கிழக்குப் பகுதியை இராணுவம் கைப்பற்ற நீண்ட காலம் எடுக்கும் எனப் புலிகள் நம்பினர்.
கடைசிப் பாதுகாப்பு இடமாக சுமார் 450 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள கடற்கரையைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தைப் புலிகள் நம்பியிருந்தனர். ஆனால் தொடர்ச்சியான இராணுவத்தின் முன்னேற்றம் புலிகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாய் அமைந்தது.
இராணுவத்தின் முன்னேற்றம் காரணமாக, புலிகளும் பொதுமக்களும் பரந்தன் – முல்லைத்தீவு வீதிக்கும் நந்திக்கடல் மற்றும் சோலை கடல் ஏரிகளுக்கும், இன்னொரு பக்கம் கடலுக்குமிடையிலான சிறியதொரு பிரதேசத்தில் சிக்கிக் கொண்டனர்.
முப்படைகளினதும் (தரை, கடல் மற்றும் வான்) 5 டிவிசன்கள் புலிகளைச் சுற்றி வளைத்தன. புலிகள் இந்தச் சுற்றி வளைப்பை உடைக்க முயன்று, 2009 பெப்ருவரியில் சிறிதளவு வெற்றியும் பெற்றனர்.
புலிகளின் இந்த நடவடிக்கைக்கு மூத்த தளபதிகளான சொர்ணம் மற்றும் லோறன்ஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆனால் இராணுவத்தினர் மார்ச் மாதத்தில் திரும்பவும் அணிவகுக்கத் தொடங்கிவிட்டனர். இராணுவம் புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் திரும்பவும் தமது முன்னைய நிலைகளைக் கைப்பற்றித் தனது நிலையைப் பலப்படுத்திக் கொண்டது. இதனால் புலிகள் மீண்டும் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
புலிகளின் வடமுனை தளபதி தீபன் உட்பட பல தளபதிகள் இணைந்து ஆனந்தபுரத்தில் இராணுவத்துக்கு எதிராகப் பாரிய தாக்குதல் ஒன்றுக்குத் திட்டமிட்டனர்.
சுமார் 1,000 புலிகள் வரை திரட்டப்பட்டு, இராணுவத்துக்கு எதிரான பதில் தாக்குதலை ஆரம்பித்தனர். புலிகளின் தலைவர் பிரபாகரனும் அந்த இடத்துக்கு வந்து நிலைமைகளைப் பார்வையிட்டார். அப்பொழுது புதுக்குடியிருப்பு – இரணைப்பாலை – புதுமாத்தளன் வீதி புலிகளின் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் பாதுகாப்பில் இருந்தது.
இந்தச் சூழ்நிலையில் இராணுவத்தினர் ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) பயன்படுத்த ஆரம்பித்தனர்.
அத்துடன், இராணுவத்தின் பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான 58 ஆவது படைப்பிரிவு, ஜெனரல் கமல் குணரத்தின தலைமையிலான 53 ஆவது படைப்பிரிவு, கேர்ணல் ஜிவி ரவிபிரிய தலைமையிலான எட்டாவது இலகு காலாட்படை என்பன 2009 மார்ச் 30 ஆம் திகதி தமது நடவடிக்கைகளை ஆரம்பித்தன. அவர்களது படைகள் புலிகளின் நிலைகள் வரை முன்னேறிச் சென்றன.
பச்சைபுல்லுமோட்டைப் பகுதியில் சாள்ஸ் அன்ரனி படைப் பிரிவின் விசேட தளபதி கோபிநாத் மற்றும் தளபதி அமுதாப் ஆகியோரின் தலைமையிலான புலிகள் இராணுவத்துக்கு எதிராக கடுமையாகப் போரிட்டனர்.
ஆனால் மார்ச் 31 ஆம் திகதி அவர்கள் இருவரும் கொல்லப்பட்டு விட்டதாகத் தகவல் வந்தது. இது புலிகளுக்கு பெரும் இழப்பாக அமைந்தது. புலிகளின் உறுப்பினர்களுக்கு மனச்சோர்வையும் ஏற்படுத்தியது. அத்துடன் ஆனந்தபுரத்தில் இருந்த புலிகள் தனித்தும் போனார்கள்.
முக்கியமான புலிகள் ஆனந்தபுரத்தில் சிக்கிக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து கொண்டதுடன், பிரபாகரனும் அங்கிருக்கலாம் எனச் சந்தேகித்த இராணுவம் முன்னேறிச் சென்று புலிகளின் நிலைகளைச் சுற்றிவளைக்கும் முயற்சியில் இறங்கியது.
ஆனால் பிரபாகரன் மார்ச் 26 அன்று அங்கிருந்து புறப்பட்டு விட்டார். தீபன் உட்பட முக்கியமான தளபதிகளே அங்கிருந்தனர்.
4, 6, 8, 12, 14 மற்றும் 20 ஆம் திகதிகளில் கஜபா படைப் பிரிவுகள், 5ஆவது விஜயபாகு படைப்பிரிவு, 9 ஆவது கெமுனு படை, 11 மற்றும் 20 ஆவது இலகு படையணிகளின் விசேட படை, இரண்டு கொமாண்டோ படையணிகள் என்பன நடவடிக்கையில் இறங்கின.
அம்பலவன் பொக்கணையிலிருந்து பச்சைப்புல்லுமோட்டை வரை இருந்த புலிகளின் அவசர விநியோகப் பாதை இராணுவத்தால் துண்டிக்கப்பட்டது. சுமார் 1,000 வரையிலான புலிப் போராளிகள் சுமார் 2 சதுர கிலோமீட்டர் அளவிலான நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டனர்.
தமது சகாக்களுக்கு உதவுவதற்காக புலிகளின் கடற்படையின் விசேட தளபதி சூசை 80 பேரை 15 வள்ளங்களில் கடல் மூலம் அனுப்பி வைத்தார்.
இந்த வள்ளங்கள் வலைஞர்மடத்திலிருந்து புறப்பட்டு, பட்டியடி கடற்கரைக்கு அருகில் இறங்கி போரிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடற்படை விழிப்புடன் இருந்ததால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை.
ஏற்கெனவே காயமடைந்திருந்த தளபதி லோறன்ஸ் தலைமையில் 120 பேரை புலிகள் அனுப்பி வைத்தனர்.
ஆனால் இராணுவம் நடத்திய தாக்குதலில் அவர்கள் சென்ற இரண்டு பஸ்களும் ட்ரக்கும் சேதமடைந்ததுடன், அதில் பயணம் செய்த பல புலிகளும் கொல்லப்பட்டனர்.
எஞ்சிய புலிகளும் தளபதி லோறன்சும் மிகுதியாக இருந்த பஸ்களில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர். அதே நேரத்தில் ஏப்ரல் 3 ஆம் திகதி ஏற்கெனவே காயம் பட்டிருந்த கேணல் பானுவும், சில புலிகளும் இராணுவ சுற்றிவளைப்பை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
theepan
ஆனால் புலிகளின் பிரதி இராணுவத் தளபதியாகவும், வடமுனைத் தளபதியாகவும் இருந்த தீபன் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தப்பிச் செல்ல முயற்சிக்கவில்லை. தன்னுடன் தப்பி வரும்படி பானு அழைத்தும் அதைத் தீபன் நிராகரித்து விட்டார்.
அதற்கு அவர் சொன்ன காரணம், தன்னுடைய போராளிகளை நட்டாற்றில் விடத் தான் விரும்பவில்லை என்பதாகும்.
போராளிகளுடன் தானும் சேர்ந்து இறக்க விரும்புவதாக பானுவிடம் தெரிவித்த தீபன், இந்தத் தகவலைப் பின்னர் பொட்டம்மானுக்கும் ரேடியோ செய்தி மூலம் அறிவித்துவிட்டார். தீபனின் இந்த உரையாடலை இடைமறித்துக் கேட்ட இராணுவத்தினர் அவரது நேர்மையையும் விசுவாசத்தையும் கண்டு அதிசயித்துப் போயினர்.
பிரிகேடியர் பானு
இராணுவத்தினர் இடைமறித்துக் கேட்ட இன்னொரு உரையாடலில், புலிகளின் பெண்கள் அணித் தளபதி விதுஸா, மேலதிக போராளிகளையும், ஆயுத தளபாடங்களையும் அனுப்பி வைக்கும்படி, புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மானிடம் கேட்ட பொழுது, இராணுவத்தின் சுற்றிவளைப்பு காரணமாகத் தனது முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டதாக பொட்டம்மான் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளைச் சரணடையும்படி பல தடவைகள் இராணுவம் தமிழில் வேண்டுகோள் விடுத்த போதிலும், ஒரு சந்தர்ப்பத்தில் 116 புலிகள் மட்டுமே சரணடைந்தனர். ஏனையோர் தொடர்ந்து போராடுவதில் திடசங்கற்பமாக இருந்தனர்.
ஏப்ரல் 3 ஆம் திகதி யுத்தத்தின் போக்கில் பாரிய திருப்பம் ஏற்பட்டது. 3 ஆம் திகதி இரவு தொடங்கி 4, 5ஆம் திகதிகளில் இராணுவம் விமானங்கள் மூலமும் ஹெலிகொப்டர்கள் மூலமும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டது.
பீரங்கிகள் மூலம் பெருந்தொகையான ஸெல்களும் ஏவப்பட்டன. இதில் பல புலிகள் உயிரிழந்தனர். திங்கட்கிழமை 525 இறந்த புலிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, அதில் 60 உடல்கள் அடையாளம் காணப்பட்டன. செவ்வாய்க்கிழமை மேலும் 100 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இறந்தவர்களில் சிலர் ‘சைனைட்’ விசக் குப்பிகளைக் கடித்து மரணமடைந்தது தெரிய வந்தது. 20 வரையிலான புலிகள் காயங்களுடன் உயிருடன் கைது செய்யப்பட்டனர். இராணுவம் வெளியிட்ட இறந்தவர்களின் சில படங்களில் சிரேஸ்ட தளபதிகள் தீபன், விதுசா ஆகியோரின் படங்களும் உள்ளடங்கி இருந்தன.
இறந்தவர்களில் தீபன், விதுசா ஆகியோருடன், கமலினி, துர்க்கா, சோபிதா, மோகனா, மாணிக்கபோடி மகேஸ்வரன் (கீர்த்தி), செல்வரத்தினம் சுந்தரம் (நாகேஸ்), கடாபி, அமுதன், சிலம்பரசன், குட்டி, கோபால், சேரலாதன், ரூபன், பஞ்சன், நேரு, அன்ரன், மான்குயில், அமுதா, இனியவன், ஆதித்தியன், சித்ராங்கன், மகிந்தன் ஆகிய முக்கியமான தளபதிகள் அடங்குவர். அன்பு, அஸ்மி ஆகிய முக்கிய தளபதிகள் காயத்துடன் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.
ஆனந்தபுரம் யுத்தத்தில் புலிகள் விமான எதிர்ப்பு பிரங்கிகள் உட்பட தமது பெரும்பாலான ஆயுதங்களையும் இழந்தனர்.
ஆனந்தபுரம் யுத்தம் குறித்துப் பின்னர் இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட ஒரு அறிக்கையில், புலிகளின் வீரதீரத்தை மெச்சியிருந்ததுடன், அவர்கள் தவறான திசையில் வழிநடத்தப்பட்டு தமது உயிர்களை வீணாக இழந்துள்ளார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.
(இந்தக் கட்டுரைக்கான சில தகவல்கள் சிரேஸ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் ‘டெயிலி மிரர்’ பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து பெறப்பட்டதாகும்)