'விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வாளர் சுட்டுக் கொலை' - காவல்துறை தலைமையகம்
31 May,2023
கொழும்பு பொரளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் புகைப்படத்தை சிறிலங்கா காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ளது.
குறித்த நபரை அடையாளம் காணும் பட்சத்தில் காவல்துறையினருக்கு அறிவிக்குமாறும் சிறிலங்கா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு பொரளை லெஸ்லி ரணகல மாவத்தையில் கடந்த 20 ஆம் திகதி உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவரினால் நபர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
லெப்டினன்ட் கேர்ணல் துவான் முத்தலிஃப் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான வர்த்தகரே சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
அவரை படுகொலைச் செய்வதற்கு வந்த ஆயுததாரிகள் பயன்படுத்தி கெப் ரக வாகனம் இம்புல்கொடயில் வைத்து கொழும்பு குற்றப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.
சந்தேக நபர் தலைமறைவு
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் சிறிலங்கா காவல்துறை அவரின் புகைப்படத்தை இன்று வெளியிட்டுள்ளது.
33 வயதுடைய குறித்த சந்தேக நபர் கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்த இரவு விடுதியின் முகாமையாளர் எனவும் அவர் இடது கை மணிக்கட்டில் இருந்து மேல் நோக்கி பறவையின் இறகு போன்ற கருப்பு நிறத்தில் பச்சை குத்தியிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றால் கொழும்பு குற்றப் பிரிவிற்கு அறிவிக்குமாறும் சிறிலங்கா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.