கூட்டமைப்பினருடனான சந்திப்பில் கோபமடைந்த ரணில் - மாவையுடன் கறார் பேச்சு
09 May,2023
இரண்டாம் இணைப்பு
நீங்கள் தானே அதிபர். உடனடியாக காணிகளை விடுவிக்குமாறு கட்டளையிட்டு காணிகளை விடுவியுங்கள் என அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது, சற்றுக் கோபமடைந்த ரணில், முதலில் உங்கள் கட்சிக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை தீருங்கள்.
அதனைக் கூட உங்களால் தீர்க்க முடியாத நிலையில் உள்ள போது, ஓர் அதிபராக எவ்வாறு நீங்கள் கூறுவது போன்று இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும் என மாவையை நோக்கி வினா எழுப்பியுள்ளார்.
முதலாம் இணைப்பு
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் எதிர்வரும் வரும் வியாழன் (11.05.2023) மற்றும் வெள்ளிக்கிழமை(12.05.2023) நாட்களில் நடக்கவுள்ள சந்திப்புகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் தமிழ் எம்.பிக்களை ஒரே நேரத்தில் சந்திக்க அதிபர் ரணில் இணக்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவுடன் இன்று (09.05.2023) பிற்பகல் அதிபர் செயலகத்தில் நடந்த சந்திப்பின்போது அதிபர் தரப்பில் இந்த இணக்கம் வெளியிடப்பட்டது.
கிழக்கு மாகாண எம்.பிக்களை அழைக்காமல் வடக்கு எம்.பிக்களை மாத்திரம் அதிபர் சந்திப்பதாகவே முன்னர் ஏற்பாடாகியிருந்தது.
ஆனால் இன்றைய சந்திப்பில் இதுவிடயம் பிரஸ்தாபிக்கப்பட்டதையடுத்து அந்த முடிவை அதிபர் மாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.